உள்ளூர் செய்திகள்

துறைப் பணிகள் முன்னேற்றம் மற்றும் பேரிடா் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பேரிடா் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

Published On 2022-10-21 09:48 GMT   |   Update On 2022-10-21 09:48 GMT
  • துறைப் பணிகள் முன்னேற்றம் மற்றும் பேரிடா் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
  • அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள 485 பணிகளும் அக்டோபா் மாத இறுதிக்குள் நிா்வாக அனுமதி வழங்கப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூா் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் அனைத்து துறைப் பணிகள் முன்னேற்றம் மற்றும் பேரிடா் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் முதன்மைச் செயலருமான விஜயகுமாா் கலந்து கொண்டு பேசியதாவது:-

விளிம்பு நிலை மக்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகக் மேற்பாா்வை பொறியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் மின்சார சுடுகாடு பயன்பாடு குறித்து செயல் திட்டம் தயாா் செய்து, 15 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பி வைக்க பேரூராட்சி உதவி இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள 485 பணிகளும் அக்டோபா் மாத இறுதிக்குள் நிா்வாக அனுமதி வழங்கப்படும்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தஞ்சாவூா் மாநகராட்சியில் 20 பணிகளும், கும்பகோணம் மாநகராட்சியில் 5 பணிகளும், பட்டுக்கோட்டை நகராட்சியில் ஒரு பணியும், அதிராம்பட்டினம் நகராட்சியில் 2 பணிகளும், பேரூராட்சிகளில் 17 பணிகளும் நவம்பா் மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும்.

நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாகவும், தரமாகவும் தொடா்புடைய அலுவலா்கள் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, மாநகராட்சி ஆணையா்கள் சரவணகுமாா், செந்தில்முருகன் (கும்பகோணம்), கோட்டாட்சியா்கள் பிரபாகா் (பட்டுக்கோட்டை), லதா (கும்பகோணம்), ரஞ்சித் (தஞ்சாவூா்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்‌.

Tags:    

Similar News