உள்ளூர் செய்திகள்

நாளையுடன் ஆய்வு பணி முடிவு: தேர்தல் வேலையில் டிமிக்கி கொடுத்த பா.ஜ.க.வினர் பதவிக்கு ஆப்பு

Published On 2024-07-04 04:37 GMT   |   Update On 2024-07-04 04:37 GMT
  • தொகுதி வாரியாக ஆய்வு நடத்தும்படி மேலிடம் உத்தரவிட்டது.
  • அறிக்கை தயார் செய்து மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்குகிறார்கள்.

சென்னை:

பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றி பெறாதது கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் கூட 2-ம் இடத்தையே பெற்றது. ஏற்கனவே இந்த தொகுதிகளில் நடத்தி இருந்த தேர்தலுக்கு முந்தைய ஆய்வுகள், கணிப்புகள் எல்லாம் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருந்தும் அந்த தொகுதிகள் கை நழுவியது எப்படி? என்று மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

இதையடுத்து தொகுதி வாரியாக ஆய்வு நடத்தும்படி மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் ஆய்வு நடந்தது.

இந்த கூட்டங்களில் வேட்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் அழைக்கப்பட்டு காரணங்கள் கேட்கப்பட்டது.

தென் சென்னையில் கனகசபாபதி முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது கட்சி தேர்தல் செலவுக்காக வழங்கிய பணத்தை முறையாக விநியோகிக்கவில்லை. கோஷ்டிகளால் தேர்தல் வேலைகளில் உள்ளடி வேலைகளும் நடந்தன என்று பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.

இதனால் சில தொகுதிகளில் நிர்வாகிகளிடையே மோதல், கைகலப்பு வரை நடந்தது. மாநிலம் முழுவதும் நடத்தப்படும் இந்த ஆய்வு கூட்டம் நாளையுடன் முடிவடைகிறது. தொகுதி வாரியாக தோல்விக்கான காரணம், நிர்வாகிகள் செயல்பாடு பற்றிய விரிவான அறிக்கை தயார் செய்து மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்குகிறார்கள்.

நாளை மறுநாள் (6-ந் தேதி) பா.ஜனதா மாநில செயற்குழுக் கூட்டம் மதுரவாயல் ஸ்ரீவாரி மண்டபத்தில் நடக்கிறது. இதில் மாநில நிர்வாகிகள், அணிகளின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மண்டலத் தலைவர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் உள்பட சுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்திலும் தேர்தல் தோல்வி தொடர்பாக விவாதிக்க திட்டமிட்டு உள்ளார்கள்.

செயற்குழு கூட்டத்துக்கு பிறகு மாவட்ட வாரியாக தேர்தல் பணியில் புகாருக்கு ஆளான நிர்வாகிகள் பதவிகளை பறிக்க திட்டமிட்டுள்ளனர். செயற்குழு முடிந்ததும் இந்த வேலைகள் தொடங்கும் என்று கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags:    

Similar News