புதிய மின்மோட்டார் பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு மானிய உதவி
- இணையதளத்தில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
- பழங்குடியினருக்கு 35 எண்களுக்கு ரூ.5.25 லட்சமும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-
நீர் பயன்பாட்டு திறனை மேம்படுத்தவும் பயிர் உற்பத்தியை அதிகரிக்கவும் நிலத்தடி நீர் பாசனத்தில் மின் மோட்டார் பம்பு செட்டுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
குறைந்த மின்மோட்டார் பம்பு செட்டுகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் மின் நுகர்வு அதிகமாகி பயிருக்கு நீர் பாய்ச்சும் நேரமும் அதிகரிக்கிறது.
மேலும் மின்மாற்றியும் அதிக சுமை ஏற்பட்டு சேதமடைகிறது.
இத்திட்டத்தின் கீழ் புதிய கிணறுகளை உருவாக்கும் விவசாயிகளுக்கும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்பும் சிறு, குறு விவசாயிகளுக்கும் புதியதாக மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பொது பிரிவினருக்கு 90 எண்களுக்கு ரூ .13.50 லட்சமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 எண்களுக்கு ரூ.5.25 லட்சமும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
மின்மோட்டார்களை வாங்க விவசாயிகளுக்கு ரூ. 15 ஆயிரம் அல்லது மின் மோட்டார் பம்பு செட்டின் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கும் விவசாயிகள் தங்களது நிலத்தில் பாசன அமைப்பினை நிறுவியிருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மானியத்திற்கு விண்ணப்பித்திட விவசா யிகள் ஆதார் அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ,வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், சாதி சான்றிதழின் நகல், ஆதித்திராவிட மற்றும் பழங்குடியினரை சேர்ந்தவராயிருப்பின் சிறு/குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், சம்மந்தப்பட்ட சிட்டா மற்றும் அடங்கல், மின் இணைப்பு சான்றிதழின் நகல் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு தஞ்சாவூர், ஓரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் தஞ்சாவூர் உபகோட்ட செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், எண்.15. கிருஷ்ணா நகர், மானோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி அஞ்சல், தஞ்சாவூர் - 613 004 என்ற முகவரியிலும், கும்பகோணம், அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் கும்பகோணம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், தொழில் பேட்டை அருகில், திருபுவனம், திருவிடைமருதூர் தாலுகா, கும்பகோணம் 612 103 என்ற முகவரியிலும், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் பட்டுக்கோட்டை உபகோட்ட செயற்பொ றியாளர் (வே.பொ) அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை- 614 601 என்ற முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.