பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரிக்க மானியம் - கலெக்டர் தகவல்
- தமிழக அரசு மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்க மானியம் அளிக்கப்படும்.
தஞ்சாவூர்:
பிரதான்மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் தமிழகத்தில் தொழில் வளத்தை பெருக்க தமிழக அரசு மத்திய அரசின் 60 சதவீதம் நிதி பங்களிப்புடன் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மரசெக்கு எண்ணெய், அரிசி மாவு மற்றும் மிளகாய் அரவை மில், பேக்கரி, இட்லி, தோசை மாவு மற்றும் பொடி, அப்பளம், ஊறுகாய், வடாகம், வத்தல் தயாரிப்பு, காரவகைகள் தயாரிப்பு, சிறுதானிய உணவுகள், அரிசிபொரி/சோளபொரி தயாரிப்பு, வறுகடலை, சத்துமாவு, பால் பதப்படுத்துதல், உண்ணத்தக்க நிலையிலுள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்க மானியம் அளிக்கப்படும்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர், குறு நிறுவனங்கள், சுய உதவிக் குழுவினர், உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள், ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க ஆர்வம் உள்ளோர் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கவும் மற்றும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். திட்ட தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தங்களின் பங்களிப்பை செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளின் மூலம் கடனாக வழங்கப்படும். அரசு திட்ட மதிப்பில் 35 சதவீதம் மானியம், அதிகபட்சம் 10 இலட்சம் வரை வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற pmfmd.mofpi gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல் பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.