கோயம்பேடு பஸ் நிலையத்தில் டிரோன் மூலம் கண்காணிப்பு- 300 போலீசார் பாதுகாப்புக்கு குவிப்பு
- சென்னையில் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்றவை பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
- பயணிகள் வைத்திருக்கும் உடைமைகள் மற்றும் பைகளை தீவிரமாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள்.
சென்னை:
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (12-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் செல்கிறார்கள். இதனால் சென்னையில் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்றவை பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக நேற்று 1365 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக 1895 சிறப்பு பஸ்களும், நாளை கூடுதலாக 1,415 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் கோயம்பேடு, தாம்பரம், கே.கே.நகர், பூந்தமல்லி, மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று முதல் பயணிகள் குவிந்து வருகிறார்கள்.
எனவே பயணிகளின் பாதுகாப்புக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 300 போலீசார் 2 ஷிப்டு முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பயணிகள் வைத்திருக்கும் உடைமைகள் மற்றும் பைகளை தீவிரமாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள். கோயம்பேடு பஸ் நிலைய வளாகம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் சோதனையும் மேற்கொண்டனர். இந்நிலையில் கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் ஆகிய பகுதிகளில் டிரோன் கேமராவை பறக்க விட்டும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இன்றும், நாளையும் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.