உள்ளூர் செய்திகள்

ஸ்ரீபுரம் முதல் ஆர்ச் வரை சாலை அமைக்கும் பணியை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

2 ஆண்டு கோரிக்கை நிறைவேறியது- சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை விரிவாக்க பணி தொடங்கியது

Published On 2022-08-03 09:35 GMT   |   Update On 2022-08-03 09:35 GMT
  • நெல்லை மாநகரப் பகுதி முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பிரதான சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
  • இந்த சாலையில் பாதாள சாக்கடை மற்றும் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டங்கள் நடந்ததின் காரணமாக கடந்த 2 வருடங்களாக சாலை உருக்குலைந்து கிடக்கிறது.

நெல்லை:

நெல்லை மாநகரப் பகுதி முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பிரதான சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு குலவணிகர்புரம் ெரயில்வே கேட் பகுதியில் இருந்து திருவனந்தபுரம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. தினமும் ரெயில்கள் செல்லும் நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால் இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து தச்சநல்லூரில் இருந்து தாழையூத்து நான்கு வழி சாலை வரையிலும் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.

எனினும் மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கியமான சாலைகளில் ஒன்றான எஸ்.என். ஹைரோடு சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது.

இந்த சாலையில் பாதாள சாக்கடை மற்றும் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டங்கள் நடந்ததின் காரணமாக கடந்த 2 வருடங்களாக சாலை உருக்குலைந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

மழை பெய்தால் வாகன ஓட்டிகள் சாலையில் வழுக்கி விழும் நிலையும், வெயில் அடித்தால் புழுதி பறப்பதுமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக ஏராளமான புகார் மற்றும் கோரிக்கை மனுக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டு வந்தது.

இதன் பயனாக நெடுஞ்சாலை துறை சார்பில் இந்த சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் முதல் டவுன் ஆர்ச் வரையிலும் இந்த சாலையானது 12 மீட்டர் அகலத்தில் இருந்து 16 மீட்டர் அகலம் கொண்டதாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு இன்று முதல் அந்த பணிகள் தொடங்கியது.

மேலும் சாலையின் நடுவில் தடுப்பு கட்டப்பட்டு அதில் செடிகள் வைத்து பராமரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த பணிகளை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் சண்முகநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சுமார் 2 ஆண்டுகளாக வாகன ஓட்டிகளும், வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி வந்த நிலையில், தற்போது சாலை சீரமைப்பு பணி தொடங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News