உள்ளூர் செய்திகள்

முக்கொம்பு மேலணையில் இருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

Published On 2022-08-04 09:20 GMT   |   Update On 2022-08-04 09:20 GMT
  • கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் 5 ஆயிரம் கனஅடி நீர் வந்த நிலையில் சலவைத்தொழிலாளர்கள் துவைத்து உலர வைத்திருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.
  • தற்போது 85 ஆயிரம் கனஅடி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதால் கரையோர பகுதி மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருச்சி:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது.

கடந்த மாதம் 30-ந்தேதி 31 ஆயிரம் கனஅடியாக இருந்து நீர்வரத்து மறுநாள் 42 ஆயிரமாக உயர்ந்தது. இதனால் மீண்டும் மேட்டூர் அணையில் 16 கண் மதகுகள் வழியாக காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

ஏற்கனவே டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. தற்போது அணைக்கு நீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதால் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் உபரிநீர் அப்படியே காவிரியாற்றில் திறக்கப்படுகிறது. இன்று காலை 9 மணி நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த தண்ணீர் நாமக்கல், கரூர் மாயனூர் வழியாக முக்கொம்பு மேலணைக்கு கரைபுரண்டு வருகிறது. இன்று காலை 4 மணி நிலவரப்படி திருச்சி முக்கொம்பு மேலணைக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அதில் 55 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றிலும், 85 கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் 5 ஆயிரம் கனஅடி நீர் வந்த நிலையில் சலவைத்தொழிலாளர்கள் துவைத்து உலர வைத்திருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.

ஆனால் தற்போது 85 ஆயிரம் கனஅடி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதால் கரையோர பகுதி மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கரையோர பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காவிரியில் 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டபோது திருச்சி மாவட்டம் உத்தமர்சீலி, திருவளர்ச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் வயல்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் வாழை, கரும்பு சேதம் அடைந்தது. அதேபோல் பூக்கள் சாகுபடியும் பாதிக்கப்பட்டது.

ஆனால் தற்போது காவிரியாற்றில் 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது. காவிரிக்கும், கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட பகுதியான கல்லணை சாலையில் அமைந்துள்ள உத்தமர்சீலி பகுதியில் இன்று காலை சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் வாழை பயிர்களை வெள்ளநீர் சூழ்ந்து மூழ்கடித்து வருகிறது.

அதேபோல் சாலையையும் மூடியவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறு, வயல், சாலை அனைத்தும் ஒரே இடமாக காட்சி அளிப்பது போல் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் சில மணி நேரங்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் உத்தமர்சீலி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு உள்ளேயும் வெள்ளநீர் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி உத்தமர்சீலி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், ஏற்கனவே காவிரியாற்றில் திடீரென்று கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வாழை பயிர்கள் சேதமடைந்தன.

இந்த நிலையில் தற்போது மீண்டும் 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் 200 ஏக்கர் வாழை தண்ணீரில் மூழ்கிவருகிறது. இதனை எந்தவொரு அதிகாரியும் பார்வையிட வரவில்லை. இதேபோல் தண்ணீர் வந்து கொண்டிருந்தால் உத்தமர்சீலி பஞ்சாயத்து குடியிருப்புகளும் பாதிக்கப்படும் என்றார்.

இதற்கிடையே நேற்று நள்ளிரவில் திருச்சி மாவட்ட கலெக்டர் முக்கொம்பு மேலணைக்கு சென்று ஆய்வு நடத்தினார். அதிக அளவில் தண்ணீர் செல்வதை பார்வையிட்ட அவர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், விழிப்புணர்வுடன் பணியாற்றிடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து காவிரியாற்றில் கூடுதல் தண்ணீர் வெளியேற்றத்தால் திருச்சி கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள கங்காரு மனநல காப்பகத்திற்கு சென்றார். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிட உத்தரவிட்டு அதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார்.

Tags:    

Similar News