ஐ.டி.பெண் ஊழியர் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த 10-ம் வகுப்பு மாணவன் கைது
- தப்பி ஓடிய சிறுவனை தேடி கண்டுபிடித்து அவனிடம் இருந்த செல்போனை போலீசார் வாங்கி பார்த்தனர்.
- போலீசார் சிறுவனின் செல்போனை முழுமையாக ஆய்வு செய்தனர்.
சென்னை:
சென்னை கொடுங்கையூர் எம்.கே.பி. நகர் பகுதியில் ஐ.டி. பெண் ஊழியர் ஒருவர் வசித்து வருகிறார். திருமணமான இவர் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் நேற்று காலையில் வேலைக்கு செல்வதற்காக இவர் கிளம்பினார்.
இதையடுத்து வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்று குளித்தார். அப்போது தனது வீட்டு அருகில் வசிக்கும் சிறுவன் ஒருவன் மறைந்திருந்து ஜன்னல் வழியாக படம் பிடிப்பதை பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் குளியல் அறையில் இருந்து வெளியில் வந்து சிறுவனை சத்தம் போட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களும் திரண்டனர். அதற்குள் சிறுவன் அங்கிருந்து ஓடி விட்டான்.
இதுபற்றி எம்.கே.பி. நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய சிறுவனை தேடி கண்டுபிடித்து அவனிடம் இருந்த செல்போனை வாங்கி பார்த்தனர். அப்போது குளியல் காட்சிகளை சிறுவன் அழித்திருந்தான்.
இருப்பினும் போலீசார் சிறுவனின் செல்போனை முழுமையாக ஆய்வு செய்தனர். அப்போது ஐ.டி.பெண் ஊழியரின் குளியல் காட்சிகள் சேமிக்கும் பகுதியில் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்தனர். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த அவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் எம்.கே.பி. நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.