உள்ளூர் செய்திகள்

12 நாட்டு துப்பாக்கிகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

Published On 2024-08-11 09:29 GMT   |   Update On 2024-08-11 09:29 GMT
  • கிராம மக்கள் கள்ளத்துப்பாக்கி வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.
  • வனத்துறையினர் துப்பாக்கிகளை ஒப்படைத்த பொதுமக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

பென்னாகரம்:

தருமபுரி மாவட்டம் பென்னாகரம், ஏரியூர், உள்ளிட்ட பகுதிகள் வனத்துறையையொட்டிய கிராமங்கள் அதிக அளவில் உள்ளதால் தங்கள் விளை நிலத்துக்குள் வன விலங்குகள் உள்ளே நுழையாமல் இருக்க ஆங்காங்கே கிராம மக்கள் கள்ளத்துப்பாக்கி வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அனுமதியின்றி கள்ளத்துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வனஅலுவலர் வனத்துறையினருக்கு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் பென்னாகரம், ஏரியூர் வன பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வன அலுவலர்கள் பொது மக்களிடம் சட்ட விரோதமாக உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்கும் பட்சத்தில் அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதியப்படாது என தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் பென்னாகரம் பகுதியில் உள்ள ஏரிமலை கிராமத்தில் சட்ட விரோதமாக உரிமம் இல்லாத வைத்திருந்த 12 நாட்டு துப்பாக்கிகளை கிராம மக்கள் தாமாக முன்வந்து வன துறையிடம் ஒப்படைத்தனர். அவற்றை கைப்பற்றி வனத்துறையினர் நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைத்த பொதுமக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

Tags:    

Similar News