- வாகன ஓட்டிகள் அனல் காற்றால் அவதி அடைந்தனர்.
- பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை குறைத்து விட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. அதிகபட்சமாக 109 டிகிரி வரை வெயில் பதிவானதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதி அடைந்தனர். வாகன ஓட்டிகள் அனல் காற்றால் அவதி அடைந்தனர். அதன் பிறகு பருவமழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. இதனால் ஈரோடு மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அக்னி நட்சத்திர வெயில் தோற்றுப்போகும் அளவிற்கு வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை குறைத்து விட்டனர்.
தொடர்ந்து 103 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் முக்கியச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
வீடுகளில் 24 மணி நேரமும் மின்விசிறி தொடர்ந்து இயங்கினாலும் வெளியில் தாக்கத்தினால் புழுக்கம் ஏற்பட்டு அவதி அடைந்து வருகின்றனர். வெளியே செல்லும்போது தோல் எரிவது போன்று உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இளநீர், மோர், கரும்பு, குளிர பானங்களை மக்கள் அதிக அளவில் விரும்பி பருகி வருகின்றனர். மீண்டும் வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என மக்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.