உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டத்தில் இருந்து மும்பைக்கு 14 வயது சிறுமியை கடத்திய டிரைவருக்கு 8 ஆண்டு ஜெயில்

Published On 2023-03-03 07:50 GMT   |   Update On 2023-03-03 07:50 GMT
  • வீட்டில் யாரும் இல்லாத போது கடந்த 22-9-98 அன்று சென்னையில் இருந்து 14 வயது சிறுமி நாகர்கோவிலுக்கு தப்பி வந்துவிட்டார்.
  • மகளை காணவில்லை என்று தொழில் அதிபர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடிவந்தனர். அவர்கள் நாகர்கோவில் வந்த சிறுமியை மீட்டனர்.

நாகர்கோவில்:

மார்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சொந்தமாக செங்கல்சூளை நடத்தி வருகிறார்.

இவருக்கு சொந்தமாக 5 லாரிகள் உள்ளது. அவரிடம் லாரி டிரைவராக இரவிபுதூர்கடையை சேர்ந்த முருகேசன் என்ற முருகன் (வயது29) என்பவர் வேலைபார்த்து வந்தார். வேலைக்கு வரும் போது முருகேசன் தொழிலதிபரின் 14 வயது மகளிடம் பேசுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 11-5-98 அன்று முருகேசன் தொழிலதிபர் வீட்டிற்கு ஒரு காரில் வந்தார். காரில் மேலும் 3 பேர் இருந்துள்ளனர். அவர்கள் திடீரென வீட்டில் இருந்து வெளியே வந்த தொழிலதிபரின் 14 வயது மகளை காரில் ஏற்றி கடத்தினர்.

இதனை கண்டு சிறுமியின் உறவினர்கள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் கார் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது. பின்னர் அவர்கள் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ரெயில் மூலம் மும்பை சென்றுள்ளனர்.

அங்கு ஒரு வீட்டில் முருகேசனும், 14 வயது சிறுமியும் கணவன், மனைவி எனகூறி தங்கியுள்ளனர். பின்னர் முருகேசன், 14 வயது சிறுமியை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்துள்ளார். அங்கு முருகேசனின் உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளனர்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது கடந்த 22-9-98 அன்று சென்னையில் இருந்து 14 வயது சிறுமி நாகர்கோவிலுக்கு தப்பி வந்துவிட்டார். இதற்கிடையே மகளை காணவில்லை என்று தொழில் அதிபர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடிவந்தனர். அவர்கள் நாகர்கோவில் வந்த சிறுமியை மீட்டனர்.

பின்னர் குழித்துறை அனைத்து மகளிர் போலீசில் இது தொடர்பாக சிறுமி கொடுத்த புகாரின் பேரில் முருகேசன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இது தொடர்பான வழக்கு குமரி மாவட்ட மகிளா விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் லிவிங்ஸ்டன் ஆஜரானார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப்ராஜ், சிறுமியை கடத்திய முருகேசனுக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

Similar News