வடமாநில முதியவரை ஆட்டோவில் சவாரிக்கு அழைத்து பணம் பறிப்பு- டிரைவர்கள் 2 பேர் கைது
- போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- பூக்கடை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் துலால் தத்தா (62). உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் தனியாக சென்னை வந்தார்.
பின்னர் அவர் வேலூர் செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு மெட்ரோ ரெயிலில் ஏறியவர் தவறுதலாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இறங்கினார்.
இதனால் எப்படி செல்வது என்று தெரியாமல் நின்ற துலால் தத்தா அங்கிருந்த ஆட்டோ ஒன்றை சவாரிக்கு அழைத்தார். அப்போது ஆட்டோ டிரைவர் வேலூர் செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
சிறிது தூரம் ஆட்டோ சென்றதும் மேலும் 3 வாலிபர்கள் ஆட்டோவில் ஏறினர். அவர்கள் முதியவர் துலால் தத்தாவை மிரட்டி கூகுள் பே மூலம் ரூ.4500 பணத்தை பறித்துக் கொண்டு முதியவரை பூந்தமல்லி பகுதியில் இறக்கி விட்டு தப்பி சென்று விட்ட னர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த துலால் தத்தா வேலூரில் உள்ள மருமகனுக்கு தகவல் தெரிவித்தார். இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில் முதியவரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டது ஆட்டோ டிரைவர்களான சூளை, கே.பி. பார்க் பகுதியை சேர்ந்த பெரிய சாமி, புளியந்தோப்பு நேரு நகரைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரிந்தது. அவர்களை பூக்கடை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகிறார்கள்.