ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் வந்து பட்டுச் சேலை திருடிய 2 பெண்கள் கைது
- ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டு சேலைகளை எடுத்துக் கொண்டு கார் டிரைவர் தப்பி சென்று விட்டார்.
- சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேட்டூர்:
மேட்டூர் அருகே நங்கவள்ளியில் பட்டுச்சேலை கடை நடத்தி வருபவர் செல்வகுமார். இந்த கடைக்கு பட்டு சேலை எடுப்பதற்காக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் சொகுசு காரில் வந்தனர். அவர்கள் செல்வகுமார் கடைக்குள் சென்று அங்கு பட்டு புடவைகள் ஒவ்வொன்றாக எடுத்து மாடல் பார்த்தனர்.
அவற்றின் விலையை கேட்டறிந்தபடி ஆடம்பர வாழ்க்கை வாழ்வது போல் வசதியானவர்களாக பாசாங்கு காட்டிக் கொண்டு விலை உயர்ந்த பட்டு சேலை கொடுக்கும் படி அவர்கள் கேட்டனர். அதன்படி விலை உயர்ந்த பட்டுச் சேலைகள் ஒவ்வொன்றாக அவர்களிடம் காண்பிக்கப்பட்டது.
அப்போது ஒரு பெண் மட்டும் வெளியே போவதும் உள்ளே வருவதுமாக இருந்ததை கண்ட கடை உரிமையாளர் சந்தேகம் அடைந்து கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சியை பார்த்தபோது அந்த பெண் பட்டுச்சேலையை உள்ளாடையில் மறைத்து வைத்து வெளியே நிறுத்தி வைத்த சொகுசு காரில் திருடி வைப்பது தெரியவந்தது.
உடனடியாக கடை உரிமையாளர் சந்திரசேகர் அந்த 2 ஆந்திர மாநில பெண்களையும் பிடித்து விசாரித்து கொண்டு இருக்கும் போது வெளியே இருந்த சொகுசு காரில் டிரைவர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டு சேலைகளை எடுத்துக் கொண்டு வேகமாக தப்பி சென்று விட்டார்.
இதனால் சுதாரித்துக் கொண்ட கடை உரிமையாளர் நங்கவள்ளி போலீஸ் நிலையத்தில் பட்டு சேலை திருடிய 2 பெண்களையும் அழைத்து வந்து ஒப்படைத்து புகார் கொடுத்தார்.
இதையடுத்து நங்கவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பெண்களிடம் விசாரித்தபோது ஆந்திரா மாநிலம் இங்கலூர் பேட்டையை சேர்ந்த ரந்தின (வயது 35), புவலட்சுமி (37) ஆகியோர் என்பது தெரியவந்தது. சொகுசு காரில் தப்பி சென்ற டிரைவர் குறித்தும் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளனர்.
பிடிபட்ட ரந்தின, புவலட்சுமி ஆகியோரை கைது செய்து இதுபோல் வேறு எங்கெல்லாம் குறி வைத்து பட்டுச் சேலைகளை திருடினார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.