உள்ளூர் செய்திகள்

மேலப்பாளையம் கால்நடை சந்தையில் 20 ஆயிரம் வியாபாரிகள் குவிந்தனர்

Published On 2023-04-04 06:42 GMT   |   Update On 2023-04-04 06:42 GMT
  • மாநகராட்சி சார்பில் வியாபாரிகள் சந்தைக்குள் வருவதற்கு ரூ. 50 கட்டணத்தில் டோக்கன் வழங்கப்படும்.
  • சிறிய வகை ஆடுகள் ரூ.2 ஆயிரம் முதலும், பெரிய வகை ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதலும் விற்பனையானது.

நெல்லை:

தென் மாவட்டத்தில் உள்ள கால்நடை சந்தைகளில் பிரசித்தி பெற்றது நெல்லை மேலப்பாளையம் சந்தை ஆகும். இங்கு ஆடுகளுடன் மாடுகள், கருவாடு உள்ளிட்டவைகளும் விற்கப்படுவதால் பொதுமக்களிடையே அதிக வரவேற்பு உண்டு.

வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் நடைபெறும் இந்த கால்நடை சந்தையில் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் அதிகாலை முதலே திரண்டு வருவார்கள். வாரந்தோறும் சுமார் ரூ. 2 கோடி அளவில் கால்நடைகள் விற்பனை நடைபெறும். ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் விற்பனை அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில் நாளை பங்குனி உத்திரம் நடைபெறுகிறது. இதனால் ஏராளமானோர் வேண்டுதலுக்காக ஆடுகளை வாங்கி செல்வார்கள். இதையொட்டி மேலப்பாளையம் சந்தையில் இன்று அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகள் திரண்டு வந்தனர். ஆடுகளை வாங்குவதற்காக பொதுமக்களும் அதிக அளவில் வந்திருந்தனர்.

இன்று விற்பனைக்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் வந்திருந்தது. அவை தரத்திற்கேற்ப விற்பனையானது. சிறிய வகை ஆடுகள் ரூ.2 ஆயிரம் முதலும், பெரிய வகை ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதலும் விற்பனையானது.

இதில் வேலி கிடா வகை ஆடுகள் ஜோடி ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. மாநகராட்சி சார்பில் வியாபாரிகள் சந்தைக்குள் வருவதற்கு ரூ. 50 கட்டணத்தில் டோக்கன் வழங்கப்படும். அந்த வகையில் இன்று காலை வரை 20 ஆயிரம் டோக்கன்கள் விற்பனையானது. இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.10 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

தொடர்ந்து வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டிப்போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். அதனை அவர்கள் ஆட்டோ, கார், லோடு ஆட்டோ வாகனங்களில் ஏற்றி சென்றனர். இதனால் இன்று மேலப்பாளையம் சந்தை பகுதி திருவிழா போல் களைக்கட்டி காணப்பட்டது.

Tags:    

Similar News