உள்ளூர் செய்திகள் (District)

திருவள்ளூர் மாவட்டத்தில் 281 வாக்குச்சாவடிகள் பதட்டமானது

Published On 2024-03-17 11:15 GMT   |   Update On 2024-03-17 11:15 GMT
  • அரசின் சாதனைகள் குறித்த தகவல்களை பேப்பர் ஒட்டி மறைத்தனர்.
  • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர்:

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி முறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளி்ல் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 83 ஆயிரத்து 710.

பாராளுமன்றத் தேர்தலுக்கு 3687 வாக்குச்சாவடிகளும், 1301 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இவற்றில் 281 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை. 6 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குச்சா வடிகளில் தேர்தல் நாளன்று நடக்கும் அனைத்து நடைமுறைகளும் சி.சி.டி.வி. மூலம் நேரடியாக மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்காக மொத்தம் 9119 வாக்குப்பதிவு கருவிகளும் 4821 கட்டுப்பாட்டுக் கருவிகளும் 5333 யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவியும் பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்துவதற்காக 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்டம் முழுவதும் 90 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 90 நிலை கண்காணிப்பு குழுக்கள், 20 காணொலி கண்காணிப்பு குழுக்களும், 10 காணொலி பார்வையாளர் குழுக்களும், வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்கும் பொருட்டு 10 உதவி செலவின குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.


மாவட்டத்தில் 87 துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் தங்களது துப்பாக்கிகளை உடனடியாக அருகாமையில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். வேட்பாளர்களாக இருப்பவர்கள் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் போன்றவற்றிற்கு அனுமதி பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் சுவிதா 'Suvidha' என்ற இணையதளம் வழியில் அனுமதி பெற்றுக் கொள்ளலாம். இந்த இணையத்தின் முகவரி 'http:\\suvidha.eci.gov.in' ஆகும். வேட்பாளர்கள் மேற்கண்ட இணைய தளத்தின் மூலம் விண்ணப்பம் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

இந்த இணையத்தின் மூலம் அனுமதி பெற 48 மணி நேரத்திற்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் நிர்வாகிகளும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் இந்த சுவிதா இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். அதேபோல் சி.விஜில் என்னும் கைபேசி செயலி இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களை புகார் அளிக்க வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க பொது மக்களுக்காக 044-2766 0642, 044-2766 0643, 044-2766 0644 மற்றும் இலவச தொலைபேசி எண் 1800 425 8515-ல் தங்கள் புகார்களை அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததை தொடர்ந்து திருவள்ளூர் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம், நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகரமன்ற தலைவர் அறை மற்றும் கூட்ட அரங்கம் ஆகியவற்றை பூட்டி சீல் வைத்தனர். இதேபோல் அரசின் சாதனைகள் குறித்த தகவல்களை பேப்பர் ஒட்டி மறைத்தனர். நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் மாற்றப்பட்டிருந்த தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டது. இரவு முதலே வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News