உள்ளூர் செய்திகள் (District)

குன்னூர் அருகே ராணுவ வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து- 3 பேர் படுகாயம்

Published On 2022-11-19 09:37 GMT   |   Update On 2022-11-19 09:37 GMT
  • காடல் டிவிசன் பகுதியில் வேணுகோபால், ஜெபாஸ்டின், தேவா ஆகிய 3 ஊழியர்கள் மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • எதிர்பாராதவிதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்த அறை முழுவதும் தீ பற்றி எரிந்தது.

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காட்டில் ராணுவ வெடிமருந்து தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு ராணுவத்திற்கு தேவையான வெடிமருந்துகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மருந்துகள் அனைத்தும் இங்கிருந்து நாடு முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது.

இன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அவர்கள் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காடல் டிவிசன் பகுதியில் வேணுகோபால், ஜெபாஸ்டின், தேவா ஆகிய 3 ஊழியர்கள் மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்த அறை முழுவதும் தீ பற்றி எரிந்தது. தீ வேகமாக பரவியதால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த விபத்தில் 3 பேரும் காயம் அடைந்தனர்.

இதனை பார்த்த மற்ற தொழிலாளர்கள் வெளியில் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் ராணுவ அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அருவங்காட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் வெடிமருந்து ஆலையில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News