மேலப்பாளையம் கால்நடை சந்தையில் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனை
- பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் ஆடுகளை குர்பானி கொடுப்பது வழக்கம்.
நெல்லை:
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக விளங்கும் எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு அடுத்தப்படியாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கால்நடை சந்தை புகழ்பெற்றது.
செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்த சந்தைக்கு தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம். அன்றைய தினம் சந்தைக்கு ஆயிரக்கணக்கில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படும். இங்கு ஆடுகள் மட்டுமின்றி மாடுகள், கோழிகள், மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் தனித்தனி இடங்களில் நடைபெறும்.
வழக்கமாக சுமார் ரூ.2 கோடி அளவில் வர்த்தகம் நடைபெறும் நிலையில் ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் சுமார் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை நடக்கும்.
இந்நிலையில் பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் ஆடுகளை குர்பானி கொடுப்பது வழக்கம். இதையொட்டி இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தைக்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேல் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதிகளவில் செம்மறி ஆடுகள் வந்திருந்தது. இதேபோல் வெள்ளாடுகளும் வந்தன.
அவற்றை வாங்குவதற்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த வியாபாரிகள் குவிந்தனர். அவர்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். பிற்பகலில் செம்மறி ஆடுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. ஆடுகள் தரத்திற்கேற்ப ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
அதிகபட்சமாக பொட்டு வகை ஆடுகள் ரூ. 35 ஆயிரத்திற்கு விற்பனையானது. இதனால் இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தை களைக்கட்டி காணப்பட்டது. இது தொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செம்மறி, வெள்ளாடு என ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தோம். இதில் செம்மறி ஆடுகள் விற்றுத்தீர்ந்த நிலையில் வெள்ளாடுகள் மட்டும் குறைந்த அளவில் உள்ளன. இன்று சுமார் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது. இதனால் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடந்துள்ளது.
ஆயிரக்கணக்கான பொது மக்களும், நூற்றுக்கணக்கான வியாபாரிகளும் திரளும் மேலப்பாளையம் கால்நடை சந்தையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் அனைவரும் வெயில், மழையில் நிற்கும் நிலை உள்ளது. எனவே ஷெட்டுகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.