உள்ளூர் செய்திகள்

அண்ணாசாலையில் வாலிபரை வெட்டி ரூ.20 லட்சம் கொள்ளை வழக்கில் 4 பேர் கைது

Published On 2022-07-25 07:13 GMT   |   Update On 2022-07-25 07:13 GMT
  • ரூ.20 லட்சம் ஹவாலா பணம் தொடர்பாக சிவ பாலனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை:

சென்னை அண்ணாசாலையில் கடந்த மாதம் 27-ந்தேதி ரூ.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதுதொடர்பாக அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இளையான்குடியை சேர்ந்த சிவபாலன் என்பவரை அரிவாளால் வெட்டி 6 பேர் கொண்ட கும்பல் இந்த பணத்தை பறித்துச் சென்றது தெரிய வந்தது. சேப்பாக்கத்தில் தங்கி இருந்த இவர் ராயப்பேட்டையில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றபோது தான் அண்ணாசாலையில் வங்கி ஒன்றின் அருகில் வைத்து 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிவபாலன் போலீசில் அளித்த புகாரில் மருந்து உபகரணங்கள் வாங்குவதற்காக இந்த பணத்தை எடுத்து சென்றதாக தெரிவித்து இருந்தார். அவரது பேச்சுக்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்ததை தொடர்ந்து போலீசார் கொள்ளை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரிலேயே விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம் என்பது தெரிய வந்தது. பாரிமுனையில் இருந்து பணத்தை எடுத்து வந்தபோது பின் தொடர்ந்து கொள்ளையடித்தவர்கள் யார்? என்பதும் அடையாளம் தெரிந்தது.

இது தொடர்பாக பூந்தமல்லியை சேர்ந்த ராஜா, கே.கே.நகரை சேர்ந்த முகமது இஸ்மாயில் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரூ.20 லட்சம் ஹவாலா பணம் தொடர்பாக சிவபாலனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பணத்தை கொடுத்து அனுப்பியது யார்? என்பதும் அடையாளம் தெரிந்துள்ளது. அவரது பின்னணி தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஹவாலா பணம் பரி மாற்றம் தொடர்பாக வருமான வரித்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஹவாலா பண பரிமாற்றத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் தலைவன் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News