உள்ளூர் செய்திகள்

விபத்துக்குள்ளான ஆட்டோ கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.


நெல்லை அருகே ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவன் பலி- மேலும் 7 மாணவர்கள் படுகாயம்

Published On 2022-06-27 05:35 GMT   |   Update On 2022-06-27 07:06 GMT
  • எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த 8 குழந்தைகளும் தூக்கி வீசப்பட்டனர்.
  • மாணவன் செல்வ நவீன் ஆட்டோவின் அடியில் சிக்கி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.

செய்துங்கநல்லூர்:

நெல்லையை அடுத்த செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் பாளையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் பயிலும் 8 மாணவர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை ஒரு ஆட்டோ பள்ளிக்கு சென்றது.

இந்த ஆட்டோவில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஊத்துப்பாறை வெட்டியம்பந்தி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் செல்வநவீன் ( வயது 5), முத்தாலங்குறிச்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் நவீன்குமார் ( 5), மகள்கள் முகிலா ( 11), ராகவி ( 6), பார்வதி நாதன் என்பவரது மகள் குணவதி ( 4), நல்லத்தம்பி மகன் இசக்கிராஜா( 5), ஆறுமுககுமார் என்பவரது மகள் அபிராமி, மகன் அரிவரதன் ஆகிய 8 பேரும் சென்றனர்.

ஆட்டோ அனவரத நல்லூர் - வசவப்பபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த 8 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

மாணவன் செல்வ நவீன் ஆட்டோவின் அடியில் சிக்கி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். செல்வநவீன் எல்.கே.ஜி. மாணவர் ஆவார். மற்ற 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு முறப்பநாடு போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த 7 மாணவர்களையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் பலியான மாணவன் செல்வ நவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மேல நாட்டார்குளத்தை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவது தெரியவந்தது.

இன்று சரவணன் தன்னுடைய மற்றொரு ஆட்டோவில் மாணவர்களை ஏற்றிச்சென்ற நிலையில் விபத்துக்குள்ளான ஆட்டோவை மேல நாட்டார்குளத்தை சேர்ந்த ராஜூ என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவர் செல்போன் பேசியபடி ஆட்டோவை ஓட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News