உள்ளூர் செய்திகள்

நடிகை மீனா கணவரின் உயிரிழப்பு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

Published On 2022-06-29 05:51 GMT   |   Update On 2022-06-29 07:45 GMT
  • பெங்களூரூவைச் சேர்ந்த வித்யாசாகர் திருமணத்திற்குப் பிறகு மீனாவுடன் பெங்களூருவில் வாழ்ந்து வந்தார்.
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டிருகிறது. இதோடு கொரோனா பரவலும் சேர்ந்து அவருக்கு மூச்சு பிரச்சனையை அதிகப்படுத்தியிருக்கிறது.

சென்னை:

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர். நேற்று இவர் காலமானார். அவருக்கு வயது 48.

மீனா, கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக 'தெறி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அவர் அதிலிருந்து குணமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

அவருக்கு ஏற்கனவே நுரையீரல் அலர்ஜி இருந்ததால், கொரோனாவுக்குப் பின் அது தீவிரமடைந்திருக்கிறது. சில தினங்களுக்கு முன் திடீரென அவருக்கு நுரையீரலில் தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து உள்ளது.

அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் போய் உள்ளது.

மாற்று நுரையீரலுக்காக சென்னை உட்படபல இடங்களில் மூளைச்சாவு அடைந்தவர்கள் உறுப்புகள் கிடைக்கிறதா என்று தேடும் பணியில் மீனாவுக்கு நெருக்கமானவர்கள் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் அவரது குடும்ப நண்பர்கள் சிலர் 48 வயதே ஆன வித்யாசாகரின் மரணத்திற்கு சொல்லும் காரணம் அதிர வைத்திருக்கின்றன.

பெங்களூரூவைச் சேர்ந்த வித்யாசாகர் திருமணத்திற்குப் பிறகு மீனாவுடன் பெங்களூருவில் வாழ்ந்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டிருகிறது. இதோடு கொரோனா பரவலும் சேர்ந்து அவருக்கு மூச்சு பிரச்சனையை அதிகப்படுத்தியிருக்கிறது. இதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு பெங்களூருவிலேயே தங்கியிருந்தார். பெங்களூருவில் இவர்கள் வாழும் வீட்டுக்குப் பக்கத்தில் அதிக அளவில் புறா வளர்க்கப்பட்டு வந்ததாகவும் இந்த புறாக்களின் எச்சத்தின் மீது பட்டு வீசும் காற்றை தொடர்ந்து அவர் சுவாசித்ததன் காரணமாக வித்யாசாகருக்கு புதிய தொற்று பரவி நுரையீரலை அதிக அளவில் பாதித்திருக்கிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட வித்யாசாகர் ஆழ்வார்பேட்டை பகுதியிலிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

அப்போதுதான் இரண்டு நுரையீரல்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்திருக்கிறது. இதற்கான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த நிலையில்தான் இரண்டு நுரையீரலைத் தொடர்ந்து சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமடைந்திருக்கிறது. வித்யாசாகரின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக போராடியிருக்கிறார்கள். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இன்று மதியம் 2 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மீனாவின் கணவர் இறந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. திரையுலகினர் பலரும் தங்கள் ஆறுதலை மீனாவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் சரத்குமார் வெளியிட்ட இரங்கல் செய்தியில், திரைப்பட நடிகையும், என் குடும்ப நண்பருமான நடிகை மீனா அவர்களின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் இறந்ததை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். வித்யாசாகர் மறைவால் ஆற்றொணா வேதனையில் ஆழ்ந்திருக்கும் மீனா, நைனிகாவும் இத்துயரில் இருந்து விரைவில் மீள்வதற்கு இறைவன் அருள் புரியட்டும்'' என கூறியுள்ளார்.

நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், என் அன்புக்குரிய தோழி மீனாவின் கணவர் வித்யாசாகர் இறந்துபோன தகவலோடு எழுந்திருக்கிறேன். நீண்டகாலமாக நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த வித்யாசாகர் இப்போது உயிரோடு எங்களுடன் இல்லை என்பது பயங்கரமாக இருக்கிறது. மீனாவுக்கும், அவரது மகள் நைனிகாவுக்கும் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, மீனாவின் குடும்பத்தின் துயரச் செய்தியோடு இன்று காலை விடிந்தது. அவர்களது குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகை மீனா எப்போதும் மங்களகரமான முகத்துடன் குடும்பத் தலைவி போன்ற கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தோற்றத்தில் இருப்பார். குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் அனைத்து ஹீரோக்களுடனும் நடித்திருக்கிறார். 90களின் முன்னனி நடிகையாக இருந்தவர் தற்போது வரைக்கும் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News