கடைசி நிமிடம் வரை சஸ்பென்ஸ்- அ.தி.மு.க.வில் நீடிக்கும் உச்சக்கட்ட பரபரப்பு
- சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஒரு புது வழக்கை தாக்கல் செய்தார்.
- அதில் 11-ந்தேதி பொதுக்குழு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது சட்ட விரோமானது. எனவே தடை விதிக்க வேண்டும் என்று முறையிட்டு இருந்தார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழு என்றாலே கடைசி நிமிடம் வரை "சஸ்பென்ஸ்" காட்சிகளாகவே தொடருகிறது.
கடந்த மாதம் 23-ந்தேதி பொதுக்குழு கூட்டிய போதும் பகலில் வெளியான தீர்ப்பின்படி பொதுக்குழு நடத்த தடையில்லை என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஓ.பன்னீர் செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை 2 நீதிபதிகள் அடங்கிய டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.
விடிய விடிய விசாரணை நடந்தது. இதனால் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலையில் தீர்ப்பு வெளியானது. பொதுக்குழு கூட்டத்தை கூட்டலாம். ஆனால் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து பொதுக்குழு கூட்டம் தொடங்கியதும் 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
அன்றைய கூட்டத்திலேயே 11-ந்தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தனித்தனி கோரிக்கைகளுடன் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது. 11-ந்தேதி பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று தீர்ப்பளித்தார்கள்.
இதையடுத்து எந்த தடங்கலும் இல்லாமல் 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும். திட்டமிட்டபடி எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் ஒரு புது வழக்கை தாக்கல் செய்தார். அதில் 11-ந்தேதி பொதுக்குழு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது சட்ட விரோமானது. எனவே தடை விதிக்க வேண்டும் என்று முறையிட்டு இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று மாலையில் முடிவடைந்த நிலையில் பொதுக்குழு கூடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு தீர்ப்பு வெளியாக உள்ளது.
தீர்ப்பு என்னவாக இருக்கும்? பொதுக்குழு நடத்த அனுமதி கிடைக்குமா? அல்லது முன்பு போலவே ஏதாவது நிபந்தனையுடன் பொதுக்குழு கூட்ட அனுமதி வழங்கப்படுமா? என்ற பல்வேறு கேள்விகளுடன் கட்சியினரிடையே உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.