அன்னவாசல் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் விபத்தில் பலி
- மாநாட்டு முன்னேற்பாடு பணிகளை பார்வையிட சென்ற அதிமுக ஒன்றிய செயலாளர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அக்கட்சியினரையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- விபத்து தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை:
மதுரை கூடல் நகரில் அ.தி.மு.க. மாநில மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டு முன்னேற்பாடு பணிகளை பார்வையிட புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும் ஒன்றிய குழு கவுன்சிலருமான சாம்பசிவம் (வயது 65). இவர் நேற்று காலை மதுரை புறப்பட்டு சென்றார்.
பின்னர் நேற்று இரவு கந்தர்வகோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் காரில் ஊர் திரும்பினார். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் முத்துடையாம்பட்டி கிராமத்தில் அவரது வீடு அமைந்துள்ளது.
இதையடுத்து சாம்பசிவம் முத்துடையாம்பட்டியில் நேற்று இரவு 11 மணியளவில் காரில் இருந்து இறங்கி வீட்டுக்கு செல்ல ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சாம்பசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
காரில் இருந்து இறங்கிய அடுத்த சில நிமிடங்களில் விபத்து நடந்து விட்டது. உடனே காரை திருப்பி கொண்டு முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் அங்கு விரைந்து வந்தார்.
பின்னர் தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் கட்சியினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சாம்பசிவத்திற்கு மனைவி மற்றும் 4 மகன்கள், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.
இதில் ஒரு மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
மாநாட்டு முன்னேற்பாடு பணிகளை பார்வையிட சென்ற அதிமுக ஒன்றிய செயலாளர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அக்கட்சியினரையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.