உள்ளூர் செய்திகள் (District)

ஒற்றை தலைமை விவகாரம்- அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்தது என்ன?

Published On 2022-06-19 09:47 GMT   |   Update On 2022-06-19 09:47 GMT
  • பொதுக்குழு கூட்டத்துக்கான தீர்மானம் தயாரிப்பதற்காக ஒரு குழு போடப்பட்டுள்ளது.
  • இந்த குழுவினர் தலைமை கழகத்தில் கூடி தீர்மான தயாரிப்பில் ஈடுபட்டனர்.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் வலுத்து வருகிறது.

இந்த நிலையில் தலைமை கழகத்தில் நடந்தது என்ன என்பது பற்றி கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

பொதுக்குழு கூட்டத்துக்கான தீர்மானம் தயாரிப்பதற்காக ஒரு குழு போடப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தலைமை கழகத்தில் கூடி தீர்மான தயாரிப்பில் ஈடுபட்டனர்.

அதில், அ.தி.மு.க.வின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டும் என்பதும் ஒரு தீர்மானமாக விவாதிக்கப்பட்டது. ஒற்றை தலைமை கொண்டுவர வேண்டும் என்பதுதான் தீர்மானமே தவிர அந்த ஒற்றை தலைமை எடப்பாடி பழனிசாமியா? ஓ.பன்னீர்செல்வமா? என்பது பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறிய பிறகு ஆலோசித்து எடுக்க வேண்டிய முடிவு. இது ஒரு பக்கம்.

மேலும் தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அனுப்பி வைக்கப்படும். அதை அவர்கள் படித்து ஒப்புதல் கொடுத்த பிறகே தீர்மான புத்தகம் தயார் செய்யப்படும்.

எனவே தீர்மானத்தில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்றாலும் அவர்கள் இருவரும் செய்து கொள்ள முடியும். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி அமைதியாக சேலத்துக்கு சென்று விட்டார்.

அதேபோல் ஓ.பன்னீர் செல்வமும் வீட்டில் அமைதியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தலைமை கழகத்துக்கு வந்து தேவையில்லாமல் கருத்துக்களை வெளியிட்டது தான் பிரச்சினையை வளர்த்து விட்டது.

இப்போது எடப்பாடி பழனிசாமியும் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம். அவரும் சென்னை வந்து இருக்கிறார். பிரச்சினை மேலும் மேலும் சூடாகி வருகிறது.

பிரசவத்துக்கு முன்பே குழந்தை ஆண்தான், பெண் தான் என்று சொல்லி சண்டை போடுவது போல் இருக்கிறது. எல்லாம் ஜெயலலிதா என்ற ஒற்றை தலைமை இல்லாமல் போனதன் விளைவுதானே என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News