உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி அருகே கோவிலுக்கு பால்குடம் எடுப்பதில் இருதரப்பினர் மோதல்: காய்கறிகளை சாலையில் கொட்டி திடீர் மறியல்

Published On 2023-03-01 08:09 GMT   |   Update On 2023-03-01 08:09 GMT
  • ஒரு தரப்புக்கு தெரியாமல் ஒரு தரப்பினர் விழா எதுவும் கொண்டாடக்கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது.
  • கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே பட்டுக்கோட்டை, அறந்தாங்கி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் பழமை வாய்ந்த பட்டவையா மற்றும் கொம்புக்கார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த செப்டம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெற்றது.

அப்போது முதலே கோவிலில் வழிபாடு மற்றும் திருவிழா நடத்துவதில் கோவில் உரிமைக்காரர்களான ஒரே சமூகத்தைச்சேர்ந்த தானான், சின்னத்தானான் வகையறாக்களுக்கும் சிவந்தான், ஏகான் வகையறாக்களுக்கும் பிரச்சினை நிலவி வந்தது.

பின்னர் ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற சமாதான கூட்டத்தில் இனிமேல் அக்கோவிலின் திருவிழாவை இருதரப்பினரும் சேர்ந்து நடத்த வேண்டும் எனவும், ஒரு தரப்புக்கு தெரியாமல் ஒரு தரப்பினர் விழா எதுவும் கொண்டாடக்கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதனிடையே இன்று ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் கோவிலில் பால்குடம் மற்றும் அன்னதான விழா நடத்த திட்டமிட்டனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் நேற்று நள்ளிரவு முதல் அங்கு ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக் ரஜினி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் ஒருதரப்பினர் மட்டும் பால் குடம் எடுப்பு திருவிழா நடத்த முடியாத என்று கூறி அனுமதி மறுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த எதிர்தரப்பை சேர்ந்தவர் இன்று கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே பட்டுக்கோட்டை, அறந்தாங்கி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இன்று அன்னதானத்திற்காக வெட்டி வைத்திருந்த காய்கறிகள், பால்குடம் எடுப்பதற்காக கொண்டு வந்த பால் மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் போலீசார் ஈடுபட்டும் ஏற்காததால் சாலையில் மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து கீரமங்கலம் பட்டவையா கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவி வருவதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News