காரைக்கால் மீனவர்கள் 12 பேரை கைது செய்வதா?- இலங்கைக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்
- வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு அனைத்து வகையான உதவிகளையும் இந்தியா தான் செய்து வருகிறது.
- ஆனாலும், அவற்றையெல்லாம் மறந்து விட்டு, தமிழ் மீனவர்களை சிங்களப் படை கைது செய்வதை இந்தியா வேடிக்கை பார்க்கக்கூடாது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன் தினம் வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
அவர்களில் ஒரு படகில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்களை கைது செய்த சிங்களக் கடற்படையினர், காரைக்கால் மீனவர்கள் எல்லை தாண்டி வந்து நெடுந்தீவு அருகில் மீன் பிடித்ததாகக் கூறி சிறையில் அடைத்து உள்ளனர். மீனவர்களை இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்த சிங்களப் படையின் செயல் கண்டிக்கத்தக்கது.
தமிழக, காரைக்கால் மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் தாக்குதல் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு அனைத்து வகையான உதவிகளையும் இந்தியா தான் செய்து வருகிறது. ஆனாலும், அவற்றையெல்லாம் மறந்து விட்டு, தமிழ் மீனவர்களை சிங்களப் படை கைது செய்வதை இந்தியா வேடிக்கை பார்க்கக்கூடாது.
தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டும் என்பது தான் இலங்கை அரசின் நோக்கம் ஆகும். அதனால் தான், தமிழக மீனவர்களை கைது செய்வது, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து அழிப்பது உள்ளிட்ட செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது.
கைது செய்யப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்கள் 12 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய மாநில அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக, காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். அதற்காக தமிழக-இலங்கை மீனவர்களுக்கிடையிலான பேச்சுகளை மீண்டும் தொடங்கவும் வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.