உள்ளூர் செய்திகள்

ஆத்தூர் அருகே வக்கீல், கடை ஊழியர் வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Published On 2022-06-28 04:56 GMT   |   Update On 2022-06-28 04:56 GMT
  • ஆத்தூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று வெங்கடேசன் வழக்கம்போல் நீதிமன்றத்திற்கு சென்று விட்டார்.
  • ஆத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் வெங்கடேசன் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பனமரத்துப்பட்டி சாலை பகுதியை சேர்ந்தவர் வக்கீல் வெங்கடேசன்.

இவர் ஆத்தூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று வெங்கடேசன் வழக்கம்போல் நீதிமன்றத்திற்கு சென்று விட்டார். அவரது மனைவி பிருந்தா விவசாய தோட்டத்திற்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் அவரது மகன் வெளியே சென்று வீடு திரும்பிய போது வீட்டின் அருகே முகமூடி அணிந்த ஒருவர் நின்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் வாலிபர் நீங்கள் யார் என்று கேட்டபோது மர்ம நபர் ஆயுதங்களால் தாக்க முயன்றார்.

இதனால் அங்கிருந்து தப்பி ஓடிய வாலிபர் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

மேலும்உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 5 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரமும், ரூ.1 லட்சம் மதிப்பிலான உயர் ரக பட்டுப் புடவைகள் உள்ளிட்ட பொருட்களும் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் வெங்கடேசன் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் நித்தியா. இவர் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்றுவிட்டார்.

திரும்பி வந்து பார்க்கும்போது முன்புற கதவு மற்றும் உள்ளிருந்த பீரோ அனைத்தும் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பீரோவில் வைத்திருந்த ஒரு கிலோ வெள்ளி, தங்க நகைகள் மற்றும் ரூ.4 லட்சத்து 28 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் தலைவாசல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக தலைவாசல் டோல்கேட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களையும் தலைவாசல் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆத்தூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 15 நாட்களாக தொடர் கொள்ளையில் முகமூடி ஆசாமிகள் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் மெத்தன போக்கில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News