உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட ஹரிஹரன்- கொலை செய்யப்பட்ட அபர்ணா.

மதுரையில் திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை கழுத்தறுத்து கொன்ற காதலன் கைது

Published On 2022-07-09 05:02 GMT   |   Update On 2022-07-09 09:48 GMT
  • ஹரிஹரனுக்கு திருமணம் செய்து கொடுக்க அபர்ணாவின் தந்தை மறுத்து விட்டதாக தெரிகிறது.
  • அதைத் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அபர்ணாவுக்கு ஹரிஹரன் தொல்லை கொடுத்து வந்தாக கூறப்படுகிறது.

மதுரை:

மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். பாண்டிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அபர்ணா (வயது19) பிளஸ்-2 படித்து முடித்து விட்டு, நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

அபர்ணாவின் பாட்டி வீடு விராட்டிபத்தில் உள்ளது. அங்கு அவர் அடிக்கடி செல்வார். அப்போது அங்குள்ள தனது மாமா வீட்டிற்கு வந்திருந்த கோவை சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஹரிஹரன் (23) என்ற வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஹரிஹரன் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அபர்ணாவுக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர்.

ஆகவே தன்னை பெண் கேட்டு வருமாறு அபர்ணா கூறியிருக்கிறார். அதன் பேரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அபர்ணாவை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு ஹரிஹரன் சென்றுள்ளார். ஆனால் ஹரிஹரனுக்கு திருமணம் செய்து கொடுக்க அபர்ணாவின் தந்தை மறுத்து விட்டதாக தெரிகிறது.

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அபர்ணாவிடம் தொடர்ந்து ஹரிஹரன் கேட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் முனீஸ்வரன் என்பவருக்கு அபர்ணாவை நிச்சயம் செய்தனர். அவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஹரிஹரன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அபர்ணாவின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று பாண்டியும், அவரது மனைவியும் வழக்கம்போல் மளிகை கடைக்கு சென்று விட்டனர். அபர்ணா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

மாலையில் அவரது வீட்டிற்கு ஹரிஹரன் வந்தார். அப்போது அபர்ணா தனக்கு நிச்சயிக்கப்பட்ட முனீஸ்வரனுடன் செல்போனில் பேசி கொண்டிருந்தார். தன்னுடன் வந்து விடுமாறு அபர்ணாவை ஹரிஹரன் அழைத்து உள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அபர்ணாவை சரமாரி குத்தினார். பின்பு அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். இந்நிலையில் அபர்ணாவிடம் போனில் பேசிக் கொண்டிருந்த முனீஸ்வரன், வீட்டில் யாரோ தகராறு செய்கிறார்கள் என அபர்ணாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து மளிகை கடையில் இருந்த அபர்ணாவின் தாய் மற்றும் சித்தப்பா ஆகியோர் வீட்டிற்குள் வந்தனர். அப்போது அவர்கள் வீட்டிற்குள்ளே இருந்து ஹரிஹரன் தப்பி ஓடினார். அவரை அவர்கள் பிடிக்க முயன்ற போது தன்னிடம் இருந்த பையை கீழே போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

அந்த பையை சோதனை செய்து பார்த்த போது அதில் கத்தி, சுத்தியல், கையுறை போன்றவை இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு அபர்ணா கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் அபர்ணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

அதில் திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்ததால் அபர்ணாவை அவரது காதலன் ஹரிஹரன் திட்டமிட்டு கொலை செய்து விட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஹரிஹரன் மோட்டார் சைக்கிளில் சென்றதால் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளும் உஷார் படுத்தப்பட்டன. அங்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும் ஹரிஹரன் எங்கு சென்றார்? என்று ரகசியமாக விசாரணை நடத்தினர்.

அவர் கோவையை சேர்ந்தவர் என்பதால் அங்கு சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது. இதனால் கோவை செல்லக்கூடிய வழித்தடத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பதுங்கி இருந்த ஹரிஹரனை தனிப்படை போலீசார் இ்ன்று கைது செய்தனர்.

இதையடுத்து அவர் அங்கிருந்து மதுரைக்கு அழைத்து வரப்பட்டார். அபர்ணாவை கொலை செய்வதற்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தன்னை காதலித்த பெண் தன்னுடன் வர மறுத்ததால், தனக்கு கிடைக்காதவர் யாருக்கும் கிடைக்க கூடாது என நினைத்து ஆத்திரமடைந்து அபர்ணாவை கொன்றதாக ஹரிஹரன் தெரிவித்தாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News