விராலிமலை அருகே விபத்து- லாரி மீது கார் மோதி ஊராட்சிமன்ற தலைவர்கள் 2 பேர் பலி
- டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ராட்சத ட்ரெய்லர் லாரி மீது பயங்கரமாக மோதியது.
- டிரைவர் உள்ளிட்ட 2 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விராலிமலை:
தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று கோட்டை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டனர். அதன் படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் சென்னைக்கு புறப்பட்டனர். அதன்படி விருதுநகர் மாவட்டம் சிவகாசி சங்கமம் நாச்சியார்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி (வயது 52) விருதுநகர் கிருஷ்ணகிரி ஊராட்சி மன்ற தலைவர் அபிமன்யு (52) விருதுநகர் நடுவப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் (52), விருதுநகர் நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரம் (55) ஆகியோர் ஒரு காரில் நேற்று இரவு சிவகாசியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டனர். காரை விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஈஸ்வர தேவர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (53) என்பவர் ஓட்டி சென்றார்.
இந்த கார் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வான திரையான் பட்டி பிரிவு ரோடு அருகே இன்று அதிகாலை 1.30 மணி அளவில் வந்தபோது விபத்தில் சிக்கியது. டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ராட்சத ட்ரெய்லர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி இடிபாடுகளுக்குள் சிக்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் பலியானார்.
பின்னர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த இன்னொரு ஊராட்சி மன்ற தலைவர் அபிமன்யு, கார் டிரைவர் பாஸ்கர் மற்றும் சங்கர், சமுத்திரம் ஆகிய 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனை செல்லும் வழியிலேயே அபிமன்யு பரிதாபமாக இறந்துவிட்டார்.
அதைத்தொடர்ந்து டிரைவர் உள்ளிட்ட 2 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்த தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்த இரண்டு ஊராட்சி சம்பந்த தலைவர்களின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
கோட்டையை நோக்கி நடைபெறும் பேரணிக்கு புறப்பட்டுச் சென்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் 2 பேர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.