விழுப்புரம் அருகே விபத்து- கார் மோதி விவசாயிகள் 2 பேர் பலி
- விவசாயிகள் 2 பேரும் தினசரி மோட்டார் சைக்கிளில் சென்று விளைநிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு ஊருக்கு திரும்புவது வழக்கம்.
- இன்று காலை ரவி, ராஜவேல் ஒரே மோட்டார் சைக்கிளில் விளை நிலத்தில் இருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள கி.முத்தாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ரவி (வயது 47), ராஜவேல் (35). விவசாயிகள். இவர்களுக்கு சொந்தமான விளை நிலம் ஊருக்கு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
எனவே விவசாயிகள் 2 பேரும் தினசரி மோட்டார் சைக்கிளில் சென்று விளைநிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு ஊருக்கு திரும்புவது வழக்கம். அதன்படி இன்று காலை ரவி, ராஜவேல் ஒரே மோட்டார் சைக்கிளில் விளை நிலத்தில் இருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் சென்றனர். அந்த வழியாக கார் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரவி, ராஜவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதுகுறித்து அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்துகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கார் டிரைவரை கைது செய்தனர்.