உள்ளூர் செய்திகள்

கணவர் மீது புகார் கொடுக்க வந்த பெண்ணை மயக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்: தற்கொலை செய்த கார் வியாபாரி

Published On 2022-08-06 09:37 GMT   |   Update On 2022-08-06 09:37 GMT
  • கார் வியாபாரி கணேசன் மீது எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மனைவியுடன் குடிபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
  • மனைவி போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் கொடுப்பதும், அதன் பிறகு சமரசமாகி ஒன்றாக குடித்தனம் நடத்துவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

மதுரை:

மதுரை எச்.எம்.எஸ் காலனி ஜானகி நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 34). இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர்.

இந்த நிலையில் கணேசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. எனவே கணவருடன் கோபித்துக் கொண்டு மனைவி தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் வாழ்க்கையில் விரத்தி அடைந்த கணேசன் சம்பவத்தன்று மதியம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக எஸ். எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கணேசன் தற்கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது தற்கொலைக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

கார் வியாபாரி கணேசன் மீது எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மனைவியுடன் குடிபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக மனைவி போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் கொடுப்பதும், அதன் பிறகு சமரசமாகி ஒன்றாக குடித்தனம் நடத்துவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கணேசன் மனைவிக்கும், ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கும் பழக்கம் ஏற்பட்டு அவர்களுக்கு இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் அவர்கள் அடிக்கடி நேரம் காலம் பார்க்காமல் செல்போனில் பேசி வந்துள்ளனர்.

இதுபற்றி அறிந்த கணேசன் தனது மனைவியையும், சப்-இன்ஸ்பெக்டரையும் கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் தொடர்பை கைவிடவில்லை என்பதால் மனம் உடைந்த கணேசன் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே தற்கொலை செய்த கணேசன், சம்பந்தப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருடன் செல்போனில் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கணேசன்:-வணக்கம் சார், புகார் கொடுக்க வந்த இடத்தில் இப்படி பண்ணலாமா?'

கணேசன்:-'பேசுவதில் தப்பு இல்லை. ஆனால் பேசுகிற விஷயம் தப்பாக இருக்கிறதே? 'தண்ணி அடித்தவன் எல்லாம் ஆம்பளை கிடையாது' என்று சொன்னீர்கள். ஆனால் நீங்கள் இப்படி பண்ணினால் என்ன அர்த்தம்?'

சப்-இன்ஸ்பெக்டர்:-'எதுவும் தப்பாக பண்ணி இருந்தால் மன்னித்துவிடு. இனிமேல் அப்படி நடக்காது'.

கணேசன்:-"எனக்கு ஒரே ஒரு பிள்ளை. நான் விரும்பி தேர்ந்தெடுத்த வாழ்க்கை. நான் மது அருந்திவிட்டு அவளிடம் சண்டை போட்டேன். அது உண்மைதான். ஆனால் உங்களிடம் புகார் செய்யத்தானே அவள் வந்தாள். அவளிடம் நீங்கள் இவ்வளவு தூரம் பேசி பழகி இருந்தால், எனக்கு எவ்வளவு சங்கடமாக இருக்கும்? .

இன்று காலையில் இருந்தே நீங்கள் பேசிக் கொண்டுதான் இருக்கிறீர்கள். நீங்கள் பேசிய அனைத்து விஷயங்களும் எனக்கு தெரியும். அவள் என்னிடம் இப்போது வரை பொய் சொல்கிறாள். நான் மனதளவில் நொந்து போய் உள்ளேன்.

சப்-இன்ஸ்பெக்டர்:-"நடந்த விஷயங்களை விட்டு விடு. இனிமேல் அப்படி நடக்காது. சரியா?"

கணேசன்:-"தயவு செய்து அவளுடன் தொடர்பை விட்டு விடுங்கள். என் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம். உங்கள் வீட்டில் யார்-யார்? என்னென்ன செய்கிறார்கள்? என்பது வரை எல்லாமே பார்த்து விட்டேன். நேரில் வந்து பேச ஒரு நிமிடம் ஆகாது. வேண்டாம். கையெழுத்து கும்பிடுகிறேன். இதோடு விட்டு விடுங்கள".

சப்-இன்ஸ்பெக்டர்:-"சரிப்பா. இனிமேல் அப்படி நடக்காது. நீ உன் குடும்பத்தை சரியாக பார்த்துக் கொள்".

கணேசன்:-"புகார் கொடுக்க வந்தவளை நீங்கள் இப்படி பயன்படுத்தி இருக்கக் கூடாது".

கணேசன்:-"நான் இந்த விஷயத்தில் வெளிப்படையாக பேசி அவமானப்பட விரும்பவில்லை. தயவு செய்து இனிமேல் மெசேஜ் எதுவும் வேண்டாம்".

சப்-இன்ஸ்பெக்டர்:-"இனிமேல் உன் குடும்பத்தை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். என்னை மன்னித்துவிடு"

இவ்வாறு அவர்கள் உரையாடல் ஆடியோவில் பதிவாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை கார் வியாபாரி-சப்-இன்ஸ்பெக்டர் இடையேயான ஆடியோ உரையாடல் தொடர்பாக, மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, நாங்கள் இது தொடர்பாக நேர்மையான முறையில் விசாரணை நடத்தி வருகிறோம். அதில் உண்மை தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News