போலி ஆவணம் கொடுத்து அரசு வேலைக்கு சேர்ந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
- வார்டு உறுப்பினர் கோவிந்தன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- வழக்கில் சம்பந்தப்பட்ட சாந்தி கடந்த 2017-ம் ஆண்டு இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சக்திவேல் (வயது25). இவர் கடந்த 2016-ம் ஆண்டு அப்பகுதியில் துப்புரவு பணியாளராக வேலைக்கு சேர்ந்தார்.
இந்த நிலையில் 1998-ம் ஆண்டு பிறந்த சக்திவேல், 1997-ம் ஆண்டு பிறந்ததாக போலி ஆவணம் கொடுத்து துப்புரவு பணியாளர் வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது.
இதுகுறித்து எழுந்த புகார் காரணமாக அவர் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்ட நிலையில் டிசம்பர் மாதத்தில் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் சக்திவேலை பணியில் சேர்த்தது தொடர்பாக அப்போது பதவியில் இருந்த முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி, முன்னாள் பேரூராட்சி தலைவர் கலைவாணி (65), முன்னாள் 3-வது வார்டு உறுப்பினர் கோவிந்தன் (52) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக மாரண்டஅள்ளி போலீசார் சக்திவேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் கலைவாணி, வார்டு உறுப்பினர் கோவிந்தன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் செயல் அலுவலர் சாந்தி கடந்த 2017-ம் ஆண்டு இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.