உள்ளூர் செய்திகள்

உறுப்பினர் பட்டாவை மாற்றிய விவகாரம்: வக்பு வாரியம் விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2022-06-28 09:40 GMT   |   Update On 2022-06-28 09:40 GMT
  • கடந்த மே 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதி வக்பு வாரியத்துக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
  • வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்தில் வாடகை தராமல் குடியிருக்கிறார்.

சென்னை:

திருவாரூர் மாவட்டம், பூதமங்கலத்தை சேர்ந்த நவாப்தீன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஜனாப் சையது அலி அக்பர் பதவி வகிக்கிறார்.

இவர், வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்தில் வாடகை தராமல் குடியிருக்கிறார். அந்த சொத்தின் பட்டாவை தன் குடும்பத்தினர் பெயரில் மாற்றிக் கொண்டுள்ளார். பரம்பரை முத்தவல்லி என்று போலியான ஆவணங்களை கொடுத்து வக்பு வாரியத்தின் உறுப்பினராக உள்ளார்.

இதுகுறித்து கடந்த மே 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதி வக்பு வாரியத்துக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, வக்பு வாரிய சட்டத்தின் அடிப்படையில், என் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி சி.சரவணன் விசாரித்தார். வக்பு வாரியம் சார்பில் வக்கீல் வி.ராகவாச்சாரி, மனுதாரர் சார்பில் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரரான சாகுல் அமீது, மனுதாரர் சிவில் வழக்கு தொடர்வது தான் சரியானது ஆகும். அதனால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறினார்.

ஆனால், மனுதாரர் தரப்பு கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. எனவே, மனுதாரர் கொடுத்த 2 புகார்கள் மீது தமிழ்நாடு வக்பு வாரியம் 6 வாரத்துகள் விசாரணை நடத்தி தகுந்த முடிவை அறிவிக்க வேண்டும்" என்று உத்தர விட்டார்.

Tags:    

Similar News