கஞ்சா கடத்திய வழக்கில் தலைமறைவான சென்னை முதியவர் கைது
- 30 கிலோ கஞ்சா, ஆட்டோ மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
- தமீம் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் கடந்த மே 20ந் தேதி திண்டுக்கல்-திருச்சி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவில் அருகே சந்தேகப்படும்படியாக வந்த ஆட்டோ, கார் ஆகியவற்றை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பாறைமேட்டு தெருவை சேர்ந்த சுப்பிரமணி (வயது 44), மது பாலாஜி (31), நாகல் நகரை சேர்ந்த மதன்குமார் (32), ரவுண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் (22), வேடப்பட்டியை சேர்ந்த மாதவன் (23), கொசவபட்டியைச் சேர்ந்த ராஜா (24) என்பதும் விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 6 பேரையும் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குளித்தலை சுரேஷ்குமார் (45) என்பவரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களிடமிருந்து 30 கிலோ கஞ்சா, ஆட்டோ மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது
இந்த வழக்கில் கடந்த 5 மாதமாக சென்னை அய்யனார் புரத்தைச் சேர்ந்த தமீம் (63) என்பவர் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி முருகன், இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ், தலைமை காவலர்கள் பழனி முத்து, செல்வகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சென்னையில் பதுங்கி இருந்த தமீம் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.