ஈரோட்டில் மோட்டார்சைக்கிள் மோதி தலைமை காவலர் படுகாயம்
- கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் கருங்கல்பாளையம் போலீஸ் தலைமை காவலர் அற்புதராஜ் என்பவர் நேற்று வாகன சோதனை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
- அப்போது நள்ளிரவு 1.30 மணி அளவில் பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து கொண்டிருந்தனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல் பாளையம் காவிரி ஆற்றுப்பாலம் அருகே சோதனைசாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு 24 மணி நேரமும் கருங்கல்பாளையத்தை சேர்ந்த போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு-சேலம் முக்கிய போக்குவரத்தாக காவிரி ஆற்று பாலம் உள்ளது. இதனால் இந்த சோதனை சாவடியில் போலீசார் 24 மணி நேரமும் பணியில் இருந்து வாகனங்களை சோதனை செய்த பிறகு உள்ளே அனுமதிப்பார்கள்.
இந்நிலையில் வழக்கம் போல் கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் கருங்கல்பாளையம் போலீஸ் தலைமை காவலர் அற்புதராஜ் (48) என்பவர் நேற்று வாகன சோதனை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவு 1.30 மணி அளவில் பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து கொண்டிருந்தனர். அந்த மோட்டார் சைக்கிளை அற்புதராஜ் நிறுத்த முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் அற்புதராஜ் மீது மோதியது.
இதில் அற்புதராஜன் 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சடைந்த மற்ற போலீசார் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து அற்புதராஜை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மது போதையில் வந்து உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.