அக்கப்போர் விமர்சனங்களை புறந்தள்ளி ஆக்கப்பூர்வமான மக்கள் பணியை தொடர்ந்திடுவோம்- மு.க.ஸ்டாலின் கடிதம்
- கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அவை மிகச்சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெறுகின்றன.
- அதன் நோக்கம், மக்களை சந்திப்பதுதான். மக்களைத் தேடிச் சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, தீர்த்திடுவோம்! ஓயாது உழைப்போம்! நல்ல பெயர் எடுத்து, மக்களின் நற்சான்றிதழைப் பெற்றிடுவோம்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஓராண்டு காலத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ள கழக ஆட்சி, ஓய்வின்றித் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது. இந்திய அளவில் முன்மாதிரியாகத் திகழ்கிறது நமது அரசு. அதன் பணிகளும், பயன்களும் தமிழ்நாட்டின் கடைக்கோடிவரை சென்று சேர்ந்திட வேண்டும் என்பதே உங்களில் ஒருவனான எனது நோக்கம். அதனை உறுதிசெய்வதற்காகத்தான் மாவட்டந்தோறும் பயணித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ஆய்வுப் பணிகளை மேற்கொண்டும் வருகிறேன்.
திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்த்து 342.24 கோடி ரூபாய் மதிப்பிலான 69 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தேன். 68.74 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 61 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். மொத்தமாக, 1,18,346 பயனாளிகளுக்கு 731 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினேன்.
ஜூலை 1-ம் நாள் அன்று மாலை திருச்சிக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து கரூருக்குச் சாலைவழிப் பயணத்தை மேற்கொண்டேன்.
கரூர் நிகழ்வில் ஏறத்தாழ 80 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். கரூர் மாவட்ட நலத்திட்டப் பணிகள், அடிக்கல் நாட்டிய திட்டங்கள், தொடங்கி வைத்த திட்டங்களின் மதிப்பு ஆகியவற்றின் மொத்த மதிப்பு 1,100 கோடி ரூபாய்.
சிறப்பான வரவேற்புடன் நாமக்கல்லுக்குச் சென்று, மதிய உணவுக்குப் பின் சிறிது ஓய்வெடுத்த நிலையில், என் மனதில் அருந்ததியின மக்களைப் பற்றிய நினைவாகவே இருந்தது. அதனால், எனது தனிச்செயலாளரிடம், "இங்கே அருந்ததியர் சமுதாயத்து மக்கள் வாழும் இடம் எது?" என்று கேட்டு தெரிவிக்கச்சொன்னேன். அவரும் விசாரித்து, சிலுவம்பட்டி என்ற பகுதியில் அருந்ததியர் சமூகத்தவர் அதிகம் வசிக்கிறார்கள் என்கிற விவரத்தை, தேநீர் நேரத்தில் என்னிடம் தெரிவித்தார்.
வேறு யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி சிலுவம்பட்டிக்குச் சென்றேன்.
சிலுவம்பட்டியில் வசிக்கின்ற ஓர் இளைஞர், "தலைவர் கலைஞரின் ஆட்சியில் வழங்கப்பட்ட 3 சதவீதம் உள்ஒதுக்கீட்டால் ஹோமியோபதி மருத்துவம் படித்தேன்" என்றார் நன்றியுணர்வுடன். அவர் வீட்டுக்குச் சென்றேன். "டீ சாப்பிடுறீங்களா?" என்று அவரும் அவரது துணைவியாரும் அன்புடன் கேட்டார்கள். அங்கே டீ சாப்பிட்டேன். அந்த இளைஞரின் துணைவியார் எம்.ஏ., பி.எட். படித்திருக்கிறார். அதே தெருவில் ஓர் இளைஞர் கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜில் எம்.பி..பி.எஸ் படிக்கிறார் என்று அறிந்தேன். கல்லூரியில் படிக்கும் இன்னும் இரண்டு மூன்று மாணவியரும் வந்தனர். எல்லோரும் ஆர்வத்துடன் வந்து, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டினால்தான் இந்த அளவிற்கு உயர்படிப்புகளைப் படிக்கும் தலைமுறையாகியிருக்கிறோம் என்பதைத் தலைநிமிர்ந்து சொல்லும் நிலையில் இருந்தனர்.
அந்தப் பகுதியில் குடிநீர்ப் பிரச்சினை இருப்பதை மக்கள் தெரிவித்தனர். அதனையும் சாலை வசதியையும் உடனடியாக செய்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தேன். அதன்பின், நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான மாநாடு நடக்கும் பந்தலுக்கு சென்றேன்.
உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து, 'மக்களோடு நில்-மக்களோடு வாழ்' என்ற தலைப்பில் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் சென்னையின் முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன் சிறப்பாக உரையாற்றினார். மாநகராட்சி-நகராட்சி-பேரூராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மக்களிடம் பழகி, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அவற்றை அதிகாரிகளுடன் ஆலோசித்து நிறைவேற்றித் தருவது தொடர்பாக ஒரு வழிகாட்டு நெறிமுறை கையேடு வழங்கப்பட்டிருந்தது. அதைப் பற்றி மா.சு. விரிவாகவும் அனுபவ அறிவுடனும் எடுத்துரைத்தார்.
தி.மு.க. முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு உரையாற்றும்போது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் நகர்ப்புறத்தில் வாழ்கிற மக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
தி.மு.க. பொதுச்செயலாளர்-நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளாட்சி அமைப்பில் தனக்கு பெரிய அனுபவம் இல்லையென்றாலும், மக்கள் நலன் காக்கும் சேவகர்களாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைச் சுருக்கமாகவும் மனதில் பதியும் வகையிலும் எடுத்துரைத்தார்.
அவரைத் தொடர்ந்து விழாத் தலைமையுரையாற்றிய உங்களில் ஒருவனான நான், மக்களாட்சியின் அடித்தளமான உள்ளாட்சி அமைப்பில் உள்ள பிரதிநிதிகளின் ஒரு கையெழுத்து எத்தகைய வலிமை வாய்ந்தது என்பதையும் விளக்கினேன்.
ஆட்சிக்குப் பெருகி வரும் நல்ல பெயரைத் தக்க வைப்பது உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கைகளில் தான் உள்ளது என்பதால், ஒழுங்கீனமும் முறைகேடும் தலைதூக்கினால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன் என்ற கண்டிப்பையும் நாமக்கல் மாநாட்டில் வெளிப்படுத்தினேன். கழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என்னை சர்வாதிகாரியாக்கமாட்டார்கள் என்கிற நம்பிக்கையுடன்தான் அதனைத் தெரிவித்தேன்.
தி.மு.க. அரசு வழங்கும் நல்லாட்சியின் அடையாளமாக உள்ளாட்சிகள் திகழட்டும். அந்த நம்பிக்கையுடன், முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றபின் பங்கேற்ற முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்தேறிய மகிழ்வுடன் சேலத்திற்கு வந்து, சென்னைக்குத் திரும்பினேன். அடுத்த நாள், ஜூலை-4 அன்று முதலீட்டாளர்கள் மாநாடு.
உலக முதலீட்டாளர் மாநாடு என்ற பெயரில் ஆடம்பரக் கூத்துகளை அரங்கேற்றிய முந்தைய ஆட்சியைப் போல இல்லாமல், மாநாட்டுக்கு அத்தியாவசியமான-நேர்த்தியான ஏற்பாடுகளுடன் கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடத்தப்பட்ட 6 முதலீட்டாளர் மாநாடுகளின் வாயிலாக 2 லட்சத்து 20ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வரப்பெற்றுள்ளன.
ஒவ்வொரு செயல்பாடும் தமிழ்நாட்டை ஓர் அங்குலமேனும் உயர்த்தும் வகையில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் தேவையை நிறைவேற்றக் கூடியதாக இருக்கவேண்டும் என்பதே எல்லாருக்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் இலக்கு. அக்கப்போர் விமர்சனங்களைப் புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான வகையில் மக்கள் பணியைத் தொடர்ந்திட வேண்டியது நமது கடமை.
கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அவை மிகச்சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெறுகின்றன. அதன் நோக்கம், மக்களை சந்திப்பதுதான். மக்களைத் தேடிச் சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, தீர்த்திடுவோம்! ஓயாது உழைப்போம்! நல்ல பெயர் எடுத்து, மக்களின் நற்சான்றிதழைப் பெற்றிடுவோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.