அமலாக்கத்துறை சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன?- கார்த்தி சிதம்பரம் மீதான விசாரணை தீவிரம்
- கார்த்தி சிதம்பரம் வீடு உள்பட 10 இடங்களில் டெல்லி சி.பி.ஐ. கடந்த மே 17-ந்தேதி சோதனை செய்தது.
- கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் மே 18-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
சென்னை:
பஞ்சாப் மாநிலம், பனவாலா என்ற பகுதியில் வேதாந்தா குழும நிறுவனத்தின் துணை நிறுவனமான டி.எஸ்.பி.எல். நிறுவனம் அமைத்து வந்த 1980 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கும் அனல்மின் நிலையத்தில், தொழில்நுட்ப பணிகளை சீனாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் செய்து வந்தது.
இப்பணிக்கு மேலும் தொழில் நுட்பப் பணியாளர்களை சீனாவில் இருந்து அழைத்து வருவதற்காக டி.எஸ்.பி.எல். நிறுவனத்தின் துணைத் தலைவர் விகாஸ் மஹாரியா, கார்த்தி சிதம்பரத்தின் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த ஆடிட்டர் பாஸ்கர ராமனை அணுகினார்.
இந்த முறைகேடு நிகழ்ந்த 2011-ம் ஆண்டு கால கட்டத்தில் கார்த்தியின் தந்தை சிதம்பரம் மத்திய உள்துறை மந்திரியாக இருந்தார்.
விகாஸ் அந்த திட்டத்தில் பணி செய்வதற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களை, அரசின் விதிமுறைகளை மீறி மறுசுழற்சி முறை அடிப்படையில் மீண்டும் வழங்கும்படி பாஸ்கர ராமனிடம் மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்காக கார்த்தி சிதம்பரம் தரப்பு ரூ.50 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டெல்லி சி.பி.ஐ. பொருளாதார குற்றப்பிரிவு, கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் எஸ்.பாஸ்கரராமன், கார்த்தி சிதம்பரம் எம்.பி., விகாஸ் மஹாரியா, பெல் டூல்ஸ் லிமிடெட், அடையாளம் தெரியாத அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது கூட்டுச் சதி செய்தல், ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்குத் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் வீடு உள்பட 10 இடங்களில் டெல்லி சி.பி.ஐ. கடந்த மே 17-ந்தேதி சோதனை செய்தது. இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் மே 18-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சி.பி.ஐ. வழங்கிய விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சட்ட விரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி அமலாக்கத்துறையினர் ஒரு வழக்கை கடந்த மே 25-ந்தேதி பதிவு செய்தனர். இதில் சி.பி.ஐ. வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த அனைவரும் எதிரிகளாக சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து இந்த வழக்குக்கான ஆதாரங்கள், தடயங்களை திரட்டும் வகையில் டெல்லி அமலாக்கத்துறையினர் சென்னையில் 6 இடங்களில் வெள்ளிக்கிழமை அன்று ஒரே நேரத்தில் சோதனை செய்தனர். இந்த சோதனை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் தொழில் அதிபர் ரமேஷ் துஹார் வீட்டிலும் நடைபெற்றது.
இதே போல எழும்பூர் மார்ஷல் சாலையில் ரமேஷ் துஹார் நடத்தும் நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்ளிட்ட 3 நிறுவனங்களிலும், தியாகராய நகரில் உள்ள ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்திலும், ஒரு வர்த்தக சங்கத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர்.
பல மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் அங்கிருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை அமலாக்கத்துறையினர் கூற மறுத்து விட்டனர்.
சில ஆவணங்களில் சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கியதை உறுதிப்படுத்தும் வகையில் தகவல்கள் இருப்பதாக தெரிகிறது. இதனால் கார்த்தி சிதம்பரம் மீதான விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.