மூதாட்டிகளை தாக்கியதாக புகார்- திருப்பூரில் தனியார் முதியோர் இல்லம் மூடல்
- இல்லத்தில் உள்ள ஊழியர்கள் மூதாட்டிகளை தாக்குவது உறுதி செய்யப்பட்டது.
- முதியோர் இல்ல நிர்வாகிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் ரோட்டில் ஒரு முதியோர் இல்லம் செயல்படுகிறது. இங்கு மூதாட்டிகள் தாக்கப்படுவதாக திருப்பூர் மாவட்ட சமூக நல அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.இந்த புகாரின் அடிப்படையில் சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு இருந்த மூதாட்டிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது இல்லத்தில் உள்ள ஊழியர்கள் மூதாட்டிகளை தாக்குவது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி கூறியதாவது:-
சமூக நலத்துறையில் அனுமதி பெறாமல் இந்த இல்லம் செயல்பட்டு வந்துள்ளது. இல்லத்தை நடத்தி வந்த விஜயலட்சுமி மற்றும் தங்கியிருந்த மூதாட்டிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.உணவை கீழே கொட்டியதற்காக மூதாட்டி தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அந்த இல்லத்தில் 8 மூதாட்டிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் வேறு இல்லத்துக்கு மாறுவதற்கு விருப்பம் தெரிவித்தனர்.
முதியோர் இல்ல நிர்வாகிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இல்லத்தை மூடிவிட்டு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தாசில்தார்-போலீசாருக்கு தகவல் அளித்து அடுத்த கட்டமாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்படும் முதிய பெண்கள் 14567 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.