உள்ளூர் செய்திகள்

ஆன்மீக பாதையில் அன்னதானத்தின் மகத்துவம்!

Published On 2024-03-01 11:00 GMT   |   Update On 2024-03-01 11:00 GMT
  • அன்னதானம் செய்வதற்கு எந்தவித சமய அடையாளங்களும் தேவையில்லை.
  • ஈஷாவில் அன்னதான திட்டம் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பது பழமொழி. உபநிடதங்களில் கூட "அன்னம் பரப்பிரம்ம ஸ்வரூபம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. உணவை தானம் செய்வதென்பது ஒருவருக்கு வாழ்க்கையை, உயிரை தானம் செய்வதற்கு ஒப்பானது. உணவு என்பது ஒருவரின் வாழ்வை நீடித்து கொள்ளும் சக்தியை வழங்குகிறது. அதனால்தான் அன்னதானத்தை நம் மரபில் 'பிராண தானம்' என்றும் அழைக்கிறோம். இதை விளக்கும் விதமாக 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்ற மற்றொரு பழமொழியும் புழக்கத்தில் உள்ளது.

அன்னதானம் செய்வதற்கு எந்தவித சமய அடையாளங்களும் தேவையில்லை. மனிதத்தின் அடிப்படையில் யாரும் யாருக்கும் அன்னதானம் செய்யலாம். ஒரு மனிதன் உயிர் வாழ அடிப்படையான மூன்று விஷயங்களில் முதன்மையானது உணவு. உடை, இருப்பிடம் ஆகிய மற்ற இரு அம்சங்கள் இல்லாவிட்டால், வாழ்வின் தரம் தான் பாதிக்கப்படும். யாரொருவருக்கு உணவு இல்லையோ அவருக்கு வாழ்வாதாரமே, வாழ்க்கையே பாதிக்கப்படும்.

அந்த காரணத்தினாலே பாரதியின் புகழ் பெற்ற பல வரிகளில், லட்சக்கணக்கானோர் நெஞ்சில் நிலைத்திருக்கும் வரியாக "தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" எனும் வரி போற்றப்படுகிறது. எனவே கல்வி தானம், பொருள் தானம் உள்ளிட்ட ஏராளமான தானங்களில் வரிசையில் அன்னதானம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

குறிப்பாக ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் குறித்து சத்குரு அவர்கள் கூறும்போது "நமது பாரம்பரியத்தில், துறவிகள் மற்றும் ஆன்மீக சாதகர்களுக்கு சேவை செய்வதென்பது மிகவும் முக்கியமாக இருந்து வந்துள்ளது. இதுவே ஒரு தனி ஆன்மீகப் பாதையாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதில் மிகவும் அற்புத அம்சமாக இருப்பது, பிறருக்கு உணவை அர்ப்பணிக்கும் அன்னதானம்." என்கிறார்.

மேலும் ஈஷாவில் அன்னதான திட்டம் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் மையத்திலுள்ள ஆசிரமவாசிகள், ஈஷாவின் பல்வேறு ஆன்மீக மற்றும் சமூக நலத்திட்டங்களில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து செயலாற்ற முடிகிறது. ஆயிரக்கணக்கான சாதகர்கள், தன்னார்வலர்களுக்கு தினசரி இரு வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி ஒவ்வொரு வருடமும் கோவை ஈஷா யோக மையத்தில் நிகழும் மகா சிவராத்திரி விழாவில் பங்கு கொள்ளும் லட்சக்கணக்கான மக்களுக்கு அன்றைய தினம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ஆதியோகி முன்பு நிகழும் மகாசிவராத்திரியை முன்னிட்டு, ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத மக்களுக்கு அருள் தரிசனம் வழங்கும் வகையில் கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதங்கள் தமிழகம் முழுவதும் வலம் வந்த வண்ணம் உள்ளன. தன்னை நாடி வந்தவர்களுக்கு அருள் தரிசனம் நல்கிய ஆதியோகி, தற்போது ரதம் வழியாக தன் பக்தர்களை தேடி சென்று அருள் பாலித்து வருகிறார். கிட்டத்தட்ட 35,000 கி.மீ தூரம் வலம் வரும் இந்த ரத யாத்திரையில் பல நூறு தன்னார்வலர்கள், சிவாங்கா சாதகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News