உள்ளூர் செய்திகள் (District)

குன்னூர் அருகே ராணுவ வெடிமருந்து தொழிற்சாலையில் மீண்டும் விபத்து- 2 பேர் படுகாயம்

Published On 2022-11-24 11:07 GMT   |   Update On 2022-11-24 11:07 GMT
  • தொழிற்சாலையில் உள்ள மருந்து தயாரிக்கும் பகுதி அருகே செட் அமைப்பதற்காக குழாய்கள் எடுத்து செல்லப்பட்டு ஊழியர்கள் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியாற்றிய மனோஜ், இமான்ஷூ ஆகிய 2 பேர் பலத்தகாயம் அடைந்தனர்.

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காட்டில் ராணுவ வெடிமருந்து தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு ராணுவத்திற்கு தேவையான வெடிமருந்துகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மருந்துகள் அனைத்தும் இங்கிருந்து நாடு முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது.

இன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அவர்கள் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த தொழிற்சாலையில் உள்ள மருந்து தயாரிக்கும் பகுதி அருகே செட் அமைப்பதற்காக குழாய்கள் எடுத்து செல்லப்பட்டு ஊழியர்கள் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியாற்றிய மனோஜ், இமான்ஷூ ஆகிய 2 பேர் பலத்தகாயம் அடைந்தனர். அவர்களுக்கு கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டது.

இதை பார்த்த சக ஊழியர்கள் ஓடி வந்து, காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

ஏற்கனவே கடந்த வாரம் இந்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு 8 பேர் காயம் அடைந்து அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News