உள்ளூர் செய்திகள் (District)

கடலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்க்கும் மழை

Published On 2023-11-14 05:50 GMT   |   Update On 2023-11-14 05:50 GMT
  • மழை காரணமாக சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
  • தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

கடலூர்:

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகுகிறது. நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் கடலூர் மற்றும் காவிரி டெல்டா உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறி ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளனர். இதன் காரணமாக இன்று ஒரு நாள் கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் விடுமுறை அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி, வேப்பூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் இன்று காலை வரைகன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

கடலூரில் தலைமை தபால் நிலையம், பஸ் நிலையம், லாரன்ஸ் சாலை கோண்டூர் உள்ளிட்ட மாநகராட்சி பகுதி முழுவதும் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. மழை காரணமாக கடலூரில் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

தொடர் மழை காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தாழ்வான பகுதிகள் மற்றும் மழையால் பாதிக்கப்படக் கூடிய இடங்களை கண்டறிந்து தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இது மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு மரம் அறுக்கும் கருவி, மணல் மூட்டைகள், குளோரின் கலந்த குடிநீர், ஜெனரேட்டர் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் இருந்து வருகின்றன.

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் நிலப் பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வருவதோடு குளங்கள் தற்போது வேகமாக நிரம்பி வருவதையும் காண முடிகிறது.

இந்த நிலையில் கடலூரில் 123 மில்லி மீட்டர் மழையும் சிதம்பரத்தில் 103 மில்லி மீட்டர் மழை ஒரே இரவில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும் . கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

Tags:    

Similar News