தாயை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு உடல்நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடிய மகள்
- சிவரஞ்சனிக்கு திருமணம் முடிந்து நாகமலை புதுக்கோட்டையில் குடியிருந்து வருகிறார்.
- வங்கி அதிகாரிகள் லோன் பெற தேவையான ஆவணங்கள் இல்லையென பரமேஸ்வரியின் விண்ணப்பத்தை நிராகரித்தனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள தேங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன்காளை. இவர் மதுரை பழங்காநத்தம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது55). பக்கவாத நோயால் அவதிப்பட்டு பரமேஸ்வரி அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேங்கல்பட்டியில் உள்ள அவரது வீட்டில் பரமேஸ்வரி வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது கணவர் சிவன்காளை மனைவியை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பரமேஸ்வரியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பரமேஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பரமேஸ்வரியின் மகள் சிவரஞ்சனி (31) கொடுத்த புகாரின் பேரில் செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகராணி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தார். பிரேத பரிசோதனையில் கழுத்து நெறிக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வாயில் நுரை தள்ளி இறந்தது அறிக்கையில் தெரிய வந்தது. இதனால் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்தனர்.
மேலும் கொலை தொடர்பாக மகள் சிவரஞ்சனி, இவரது கணவர் ஜெயபிரகாஷ் (30), அவரது நண்பர்கள் நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த மதுசூதனன் (30), மதனகோபால் (29), அழகுபாண்டி (34) ஆகியோர் ஆ.கொக்குளம் வி.ஏ.ஓ., சங்கர் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் கூறியதாவது:-
தேங்கல்பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரியின் முதல் கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்த சிவன்காளையுடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் அவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். சிவன்காளைக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி இறந்து விட்டார்.
சிவரஞ்சனிக்கு திருமணம் முடிந்து நாகமலை புதுக்கோட்டையில் குடியிருந்து வருகிறார். பரமேஸ்வரிக்கு இரண்டு சொந்த வீடுகள் உள்ளது. இந்த நிலையில் தேங்கல்பட்டியில் சொந்த வீடு கட்டும் பணி நடைபெற்று வந்தது. வீடு கட்டுவதால் பண நெருக்கடியில் இருந்த பரமேஸ்வரி வீட்டின் பெயரில் வங்கியில் கடன் பெற முயன்றுள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் லோன் பெற தேவையான ஆவணங்கள் இல்லையென பரமேஸ்வரியின் விண்ணப்பத்தை நிராகரித்தனர்.
இதனால் வேறுவழியின்றி மகள் சிவரஞ்சனியின் உதவியை நாடியுள்ளார். அப்போது மகளிடம் அவரது பெயரில் உள்ள வீட்டை அடமானம் வைத்து லோன் வாங்கி தருமாறு கூறி தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். ஆனால் மகள் சிவரஞ்சனி தனது தாய் இரண்டாவதாக சிவன்காளையை திருமணம் செய்தது பிடிக்காமலும், சொத்துக்களை தன்னிடம் இருந்து வாங்கி அவருக்கு கொடுத்து விடுவார் என்ற எண்ணத்திலும், ஏற்கனவே உள்ள வீட்டை தன் பெயரில் எழுதி தருமாறு சிவரஞ்சனி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் சிவரஞ்சனி, அவரது கணவர் மற்றும் அவரின் கூட்டாளிகள் மூன்று பேரும் தேங்கல்பட்டியிலுள்ள பரமேஸ்வரியின் வீட்டிற்கு சென்று சொத்தை சிவரஞ்சனி பெயருக்கு மாற்றி தரும்படி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் பரமேஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதிலிருந்து தப்பித்து கொள்ள பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாகவும், தன் தாயின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து மகள் சிவரஞ்சனி, அவரது கணவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் கூட்டாளிகள் உள்பட 5 பேரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சொத்துக்காக பெற்ற மகளே தனது தாயை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.