அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது தி.மு.க. வழக்கறிஞர்கள் அணியினர் புகார்
- தருமபுரி மாவட்டம் அரூர் கச்சேரிமேடு பகுதியில் கடந்த 16-ந் தேதி பொதுக்கூட்ட மேடையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.
- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தி.மு.க. வழக்கறிஞர்கள் அணி மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்.
தருமபுரி:
பொதுக்கூட்ட மேடை ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக தருமபுரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதமிடம் தருமபுரி மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர்கள் அணியினர் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தி.மு.க. வழக்கறிஞர்கள் அணி மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:-
தருமபுரி மாவட்டம் அரூர் கச்சேரிமேடு பகுதியில் கடந்த 16-ந் தேதி பொதுக்கூட்ட மேடையில் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தையும், தமிழக அரசின் பல்வேறு திட்டங்களையும் விமர்சித்தும் வீண் வதந்திகளை பரப்பியும் மக்களின் மத்தியில் வரவேற்பையும் நம்பிக்கையும் ஏற்படுத்திய திராவிட மாடல் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
அப்போது தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடகம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், மேற்கு மாவட்டம் துணை அமைப்பாளர் ஆ.மணி, ஒன்றிய செயலாளர் கோபால், தகவல் தொழில்நுட்ப மாவட்ட அமைப்பாளர் கவுதம் மற்றும் தி.மு.க. வழக்கறிஞர்கள் அணியினர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.