கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி
- பெருமாள் ஆடுகளை மேய்ச்சலுக்காக வனத்திற்கு அழைத்து சென்றார்.
- மாலையில் ஆடுகள் மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்தது. ஆனால் பெருமாள் வீட்டிற்கு திரும்ப வரவில்லை.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் சிங்காரா வனசரக எல்லைக்குட்பட்ட வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள்(வயது80).
இவர் தனது மகன் கணபதி என்பவருடன் வசித்து வருகிறார்.
பெருமாள் தனது வீட்டில் 16-க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். தினமும் ஆடுகளை அருகே உள்ள வனத்திற்குள் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.
நேற்றும் வழக்கம்போல பெருமாள் ஆடுகளை மேய்ச்சலுக்காக வனத்திற்கு அழைத்து சென்றார். இந்த நிலையில் மாலையில் ஆடுகள் மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்தது. ஆனால் பெருமாள் வீட்டிற்கு திரும்ப வரவில்லை.
இரவு வெகுநேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது மகன் கணபதி வாழைத்தோட்டம் கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதிகள், அக்கம்பக்கத்தினர் வீடுகளிலும் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.
இதையடுத்து சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து வாழைதோட்டம் கிராமத்தையொட்டிய வனப்பகுதிகளுக்குள் தேடி பார்த்தனர். இரவு நேரம் என்பதாலும், தொடர்ந்து மழை பெய்ததாலும் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இன்று காலை 2-வது நாளாக மாயமான பெருமாளை வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பொக்காபுராம் காவல் பகுதிக்குட்பட்ட கல்லட்டி கூடுதல் காப்புக்காட்டில் பெருமாள் இறந்த நிலையில் கிடந்தார்.
அவரது உடலை வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஆடு மேய்க்க சென்ற அவரை யானை தாக்கியதும், அதனால் அவர் இறந்ததும் தெரியவந்தது.
யானை தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.