என்ஜினீயரிங் மாணவர்களுக்கான கலந்தாய்வு ரேண்டம் எண் வெளியீடு
- தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
- விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கியது. என்ஜினியரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 4ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், இதுவரை மொத்தம் 2,29,167 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதில் 1,87,693 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் 1,55,124 பேர் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர். இந்த மாணவர்களுக்கான தரவரிசை முடிவு செய்யும் வகையில் ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது. ஒரே மாதிரியாக கட் ஆஃப் பெறும் மாணவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது ரேண்டம் எண் மூலம் முடிவு செய்யப்படும்.
ரேண்டமில் பெரிய எண் பெற்ற மாணவர்களுக்கு தரவரிசையில் முன்னுரிமை வழங்கப்படும். மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இணைய வழியில் வருகிற 20ம் தேதி தொடங்குகிறது.
இந்த ஆண்டுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு ஆன்லைன் வழியாக அடுத்த மாதம் 2-ம் தேதி தொடங்க உள்ளது. சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 2 முதல் 5ம் தேதி வரையும், பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 24ம் தேதி வரை நடைபெறுகிறது.
மாணவர்கள் ரேண்டம் எண் மற்றும் கூடுதல் விவரங்களை www.tneaonline.org மற்றும் tndte.gov.in ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.