உள்ளூர் செய்திகள்

தரமணியில் என்ஜினீயரிங் படித்துவிட்டு 'கிளினிக்' நடத்திய போலி டாக்டர் கைது

Published On 2023-02-10 06:40 GMT   |   Update On 2023-02-10 06:40 GMT
  • ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயரிங் முடித்திருந்த செம்பியன் டாக்டர் ஆகும் வகையில் போலியாக சான்றிதழ் தயாரித்து ஆஸ்பத்திரி நடத்தி வந்து உள்ளார்.
  • செம்பியன் கடந்த 8 ஆண்டுகளில் சென்னையில் பல்வேறு இடங்களில் கிளினிக் நடத்தியதாக கூறப்படுகிறது.

அண்ணாநகர்:

தரமணியை சேர்ந்தவர் செம்பியன் (வயது 34). இவர் அப்பகுதியில் கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்து வந்தார். ஆஸ்பத்திரியுடன் மெடிக்கலும் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் செம்பியன் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வருவதாக அரும்பாக்கத்தில் உள்ள மருத்துவ கவுன்சில் அலுவலகத்துக்கு புகார் வந்தது.

இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது செம்பியன் மருத்துவம் படிக்காமல் கடந்த 8 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்தது உறுதியானது.

இதையடுத்து செம்பியனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயரிங் முடித்திருந்த செம்பியன் டாக்டர் ஆகும் வகையில் போலியாக சான்றிதழ் தயாரித்து ஆஸ்பத்திரி நடத்தி வந்து உள்ளார்.

தஞ்சாவூரை சேர்ந்த அவரது பெயரில் உள்ள செம்பியன் என்பவர் மருத்துவம் படித்து விட்டு டெல்லியில் டாக்டராக உள்ளார்.

இதனை கண்டுபிடித்த போலி டாக்டர் செம்பியன் அவரது சான்றிதழை ஆன்லைன் மூலம் பெற்று ஆஸ்பத்திரி நடத்தி வந்து உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள டாக்டர் செம்பியன் தனது உயர்படிப்பு சான்றிதழை பதிவு செய்ய முயன்ற போது தான் தனது பெயரில் தரமணியில் போலியாக ஆஸ்பத்திரி நடத்தியது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து டாக்டர் செம்பியன் மருத்துவ கவுன்சிலில் அளித்த புகாரின் அடிப்படையில் போலி டாக்டர் செம்பியன் சிக்கிக் கொண்டார்.

அவர் கடந்த 8 ஆண்டுகளில் சென்னையில் பல்வேறு இடங்களில் கிளினிக் நடத்தியதாக கூறப்படுகிறது.

கொரோனா கால கட்டத்திலும் அவரிடம் ஏராளமானோர் சிகிச்சை பெற்று உள்ளனர்.

தற்போது செம்பியன் போலி டாக்டர் என்பது தெரியவந்து உள்ளதால் அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.

என்ஜினியரிங் படித்த செம்பியன் எப்படி சிகிச்சை அளித்தார்? மருத்துகளை பரிந்துரைத்தது எப்படி? ஆன்லைன், யூடியூப் பார்த்து சிகிச்சை அளித்தாரா? என்று அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News