சொத்துக்களை விற்றதால் தந்தையை கொன்றேன்- கைதான மகன் வாக்குமூலம்
- பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பெற்ற மகனே தந்தையை கொலை செய்தது தெரியவந்தது.
- கடல்கனியை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.
நெல்லை:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 73). இவருக்கு கடல்கனி என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
கடல்கனி கேரள மாநிலம் கொட்டாரக்கரையில் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார். நேற்று முன்தினம் தனது தந்தையை பஸ்சில் நெல்லைக்கு அழைத்து வந்த கடல்கனி, வண்ணார்பேட்டை பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் இருந்து தரதரவென இழுத்துச்சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு இடையே வைத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினார்.
இதுதொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பெற்ற மகனே தந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடல்கனியை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். அவர் கேரளாவில் வியாபாரம் செய்து வருவதால் அங்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல் சவுத்திரி தலைமையிலான போலீசார் அங்கு சென்று முகாமிட்டு கொலையாளியை தேடி வந்த நிலையில் நேற்று இரவு கொட்டாரக்கரையில் வைத்து கடல்கனியை கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், அவர் கூறியதாவது:-
எனது தந்தையின் பெயரில் இருந்த ஒரு சொத்தை அவர் ஏற்கனவே விற்றுவிட்டார். தற்போது மற்றொரு சொத்தையும் விற்கப்போவதாக சொன்னார். இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன். அதே நேரத்தில் அவர் வயது முதிர்ச்சியால் நோய் வாய்ப்பட்டார். அவரை ஒவ்வொரு ஆஸ்பத்திரிக்கும் அழைத்துச்சென்று வெறுப்படைந்துவிட்டேன். இதனால் மன விரக்தியில் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்து விட்டேன் என்றார். இதனை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்து கொண்டனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.