திருவள்ளூர்: காங்கிரஸ் வேட்பாளர் தேர்தல் விதியை மீறி 6 நபர்களுடன் சென்று வேட்பு மனு தாக்கல்
- வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.
- காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கி இன்று மதியம் 3 மணியுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து அரசியல் கட்சிகள் தங்களது சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இதில் திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் கடைசி நாளான இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் தெருக்கூத்து, மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.
இந்நிலையில் வேட்பாளர் உடன் முன்னாள் அமைச்சர் ஆவடி சா.முநாசர், திமுக எம்எல்ஏக்கள் வி. ஜி ராஜேந்திரன், மாதவரம் சுதர்சனம் கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜன், பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் உள்பட 5 பேர் வந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான த.பிரபுசங்கரிடம் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் சுதாரித்துக் கொண்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி பிரபு சங்கர் தேர்தல் விதிகளை மீறி 6 பேர் இருப்பதால் ஒருவர் வெளியேற வேண்டும் என எச்சரித்தார்.
இதையடுத்து மாவட்ட காங்கிரஸ் தலைவரும் பொன்னேரி எம்எல்ஏவுமான துரை சந்திரசேகர் வேட்பு மனு தாக்கல் அறையில் இருந்து ஓட்டம் பிடித்தார்.