கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்து இறந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி- அமைச்சர் தகவல்
- சாலை வளைவில் நிலை தடுமாறிய ஆட்டோ அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது.
- விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்குமாறும் அங்குள்ள டாக்டர்களுக்கு அறிவுருத்தினார்.
செஞ்சி:
சென்னையை சேர்ந்த 9 பேர் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு ஆட்டோவில் வந்தனர். கிரிவலம் முடிந்து தங்களின் குலதெய்வம் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அருகில் இருந்த தங்களின் உறவினர் வீட்டிற்கு நள்ளிரவு 2.30 மணிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது செஞ்சி அருகேயுள்ள கப்பை என்ற ஊர் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலை வளைவில் நிலை தடுமாறிய ஆட்டோ அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. ஆட்டோவில் பயணித்தவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டனர். இதில் ஆட்டோ டிரைவர் யுவராஜ், சத்யா ஆகியோர் உட்பட உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். யுவராஜின் மகன்கள் பிரதீஸ்வரன் (வயது 11), ஹரி பிரசாத் (வயது 7) ஆகியோர் கிணற்றில் மூழ்கி இறந்து போனார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் படுகாயம் அடைந்து செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இதுகுறித்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து விபத்தில் இறந்து போன 2 சிறுவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவு பெற்றுள்ளதாகவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறும் அங்குள்ள டாக்டர்களுக்கு அறிவுருத்தினார். அப்போது செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், தாசில்தார் ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.