அரசு பஸ்சை சிறை பிடித்து பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
- சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
- மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில் குத்தியாலத்தூர் பஞ்சாயத்து மற்றும் திங்களூர் பஞ்சாயத்தை கொண்டு கடம்பூர் பகுதியை இரண்டாகப் பிரித்து கிராமங்கள் 2 பஞ்சாயத்துகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் திங்களூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியூர் எனும் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த ஒன்றறை மாதமாக குடிநீர் வரவில்லை. இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் தொலைவு சென்று வருகின்றனர்.
இதுகுறித்து இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இதுதொடர்பாக கடந்த மாதம் நடந்த கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முறையான குடிநீர் வழங்க வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் தற்போது வரை குடிநீர் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று காலை கதுபஸ்வண்ணபுரம் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திரண்டு வந்து சத்தியமங்கலத்தில் இருந்து தேர்மாளம் செல்லும் அரசு பஸ்சை சிறைபிடித்து திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து கடம்பூர் போலீசார் மற்றும் திங்களூர் பஞ்சாயத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து உங்கள் பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்று மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.