உள்ளூர் செய்திகள்

துப்பாக்கி சூட்டில் தொழிலாளி பலி- கோர்ட்டு உத்தரவின்பேரில் வனவர், வனக்காவலர் கைது

Published On 2024-03-01 11:10 GMT   |   Update On 2024-03-01 11:10 GMT
  • யானைபுகா அகழிவழியாக முடனாரி புதுப்பாலம் பகுதியில் அவர்கள் சென்றபோது மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.
  • ஈஸ்வரனின் உறவினர்கள் அவரது உடலை வைத்து போராட்டம் நடத்தியதோடு வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

கூடலூர்:

தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை காப்பு காட்டில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி கூடலூர் வனவர் திருமுருகன் தலைமையில் வனக்காப்பாளர்கள், வனக்காவலர் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

யானைபுகா அகழிவழியாக முடனாரி புதுப்பாலம் பகுதியில் அவர்கள் சென்றபோது மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அங்கு சோதனையிட்டபோது மறைந்திருந்த குள்ளப்பகவுண்பட்டியை சேர்ந்த தோட்ட காவலாளியான ஈஸ்வரன் (55) என்பவரை பிடிக்க முயன்றனர்.

ஆனால் அவர் தப்பி ஓட முயன்றபோது வனத்துறையினரும் விரட்டி சென்று துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரேஞ்சர் முரளிதரன் லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ஈஸ்வரன் வனத்துறையினரை கத்தியால் குத்த முயன்றதால் ஏற்பட்ட தகராறில் தற்காப்பிற்காக சுடப்பட்டபோது ஈஸ்வரன் பலியானதாக தெரிவித்தார்.

ஆனால் ஈஸ்வரனின் உறவினர்கள் அவரது உடலை வைத்து போராட்டம் நடத்தியதோடு வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மேலும் ஈஸ்வரனின் மகள் மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் புகார் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து வனவர், வனக்காவலர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில் வனவர் திருமுருகன், வனக்காவலர் ஜார்ஜ்குட்டி என்ற பென்னியை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News